தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும்: அமைச்சர்களிடம் நட்டா உறுதி
தமிழகத்தில் எய்ம்ஸ் சிறப்பு மருத்துவமனை அமையும் என மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா உறுதி அளித்துள்ளார்.
இந்த தகவலை அவருடனான சந்திப்புக்குப் பின் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு மீதான தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவது தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் உயர்கல்வித் துறையின் கே.பி.அன்பழகன் ஆகியோர் இன்று (புதன்கிழமை) அமைச்சர் நட்டாவை சந்தித்தனர். இந்த சந்திப்பில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்தும் அவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர் கூறுகையில், “தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை உறுதியாக அமையும் என்ற சாதகமான பதிலை அமைச்சர் நட்டா எங்களிடம் தெரிவித்துள்ளார். இத்துடன், அதன் திறப்பு விழாவிற்கு தான் நேரில் தமிழகம் வரவிருப்பதாகவும் அவர் கூறினார்” என்றார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க வேண்டி மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தமிழக அரசு நிலம் ஒதுக்கி இருந்தது. இதை டெல்லியில் இருந்து மத்திய அரசு அனுப்பிய குழு இருமுறை நேரில் வந்து பார்த்து சென்றது. இதில், அந்த இடங்கள் போதாது என தகவல் வெளியானது. இதை அடுத்து மதுரை, சேலம் உட்பட பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் அமைக்கக் கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால், எந்த இடத்தில் அமையும் என்பது இன்னும் முடிவாகாமல் உள்ளது.
இந்நிலையில், இன்று தமிழக அமைச்சர்கள் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்தபோது எய்ம்ஸ் குறித்து வலியுறுத்தியுள்ளனர்.