பன்னீருக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ., ஆதரவு!
கோவை வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருண்குமார், பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு அளித்தார். இதனால், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
நடுநிலை:
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோரும் முன், சசிகலா ஆதரவு அணியில் இருந்த, கோவை வடக்கு தொகுதி, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., அருண்குமார், கூவத்துார் விடுதியில் இருந்து, வெளியேறினார். ‘பழனிசாமிக்கு ஆதரவாக ஓட்டளிக்க விரும்பவில்லை’ எனக் கூறி, ஓட்டெடுப்பை புறக்கணித்து, சொந்த ஊர் திரும்பினார். அவர் எந்த அணிக்கும் ஓட்டு அளிக்காமல் நடுநிலை வகித்தார்.
ஆதரவு:
இந்நிலையில், நேற்று பன்னீர்செல்வத்தை, அவரது இல்லத்தில் சந்தித்த அருண்குமார், தன் ஆதரவை தெரிவித்தார். அவருடன், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, மூன்று பொதுக்குழு உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.
வெற்றி கணக்கு:
அப்போது, அருண்குமார் கூறுகையில், ”கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்த கும்பலை எதிர்த்து, தர்ம யுத்தத்தை துவக்கி உள்ள, பன்னீர்செல்வம் அணியில் இணைந்துள்ளேன். கட்சியும், ஆட்சியும் அவரிடம் வந்து சேரும். ஆர்.கே.நகர் தொகுதியில், வெற்றி கணக்கை துவக்குவோம்,” என்றார்.