தேசிய அளவிலான கூடைப்பந்து கோவையில் நாளை தொடக்கம்
கோவையில் 31-வது பெடரேசன் கோப்பைக்கான தேசிய ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் நாளை (மார்ச் 22) முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
இது குறித்து தமிழ்நாடு கூடைப் பந்து கழக செயலாளர் (பொறுப்பு) டி.பார்வேந்தன், ஒருங்கிணைப் பாளர் டி.ஆர்.பாலன், பி.எஸ்.ஜி. விளையாட்டுக் கழகச் செயலாளர் டி.பழனிசாமி ஆகியோர் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், அரைஸ் அறக்கட்டளை, கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம், பி.எஸ்.ஜி. விளையாட்டு சங்கம் ஆகியவை சார்பில், கோவை பிஎஸ்ஜி உள்விளையாட்டு அரங்கில் 31-வது பெடரேசன் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டிகள் நடைபெறுகிறது.
தமிழகத்தில் 20 ஆண்டு களுக்குப் பிறகும், கோவையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகும் இப்போட்டி நடைபெறுகிறது. இதில் குஜராத், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தராகண்ட், டெல்லி, தெலங்கானா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மாநில அணிகள் மற்றும் ரயில்வே அணிகள் பங்கேற்கின்றன.
போட்டிகள் தினமும் மாலை 3 மணிக்குத் தொடங்கும். வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப் படும். மாநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.
இதில், தமிழ்நாடு கூடைப்பந்துக் கழக முன்னாள் தலைவர் எல்.எம்.ராமகிருஷ்ணன், போட்டிக் குழுத் தலைவர் ஆதவ் அர்ஜுன், இந்திய கூடைப்பந்துக் கழகப் பொதுச் செயலாளர் சந்தர் முகி சர்மா, தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகத் தலைவர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன், முதுநிலை துணைத் தலைவர் செந்தில் தியாகராஜன், கோவை மாவட்டத் தலைவர் ஜி.செல்வராஜ், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி தலைவர் ஆர்.ருத்ரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.