மொபைல் போன் சேவைக்கு ஆதார் எண்
தற்போது பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆலோசனை:
கடந்த பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட், மொபைல்போன் வைத்திருப்பவர் அனைவரிடமும் ஆதார் எண் மற்றும் கே.ஓய்.சி., படிவத்தை ஒராண்டிற்குள் வாங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம், யுஐடிஏஐ, டிராய் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
சுற்றறிக்கை:
தொடர்ந்து மத்திய அரசு தொலைதொடர்பு துறை அலுவலகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், புதிய மொபைல் போன் இணைப்பு மற்றும் டெலிபோன் இணைப்பு வழங்கப்படும்போது, அடையாளம் காண ஆதார் எண் வாங்கப்படுவது வெற்றியடைந்துள்ளது. இதே முறையை அடுத்த ஓரு வருடத்திற்குள் தற்போது பயன்பாட்டில் உள்ள போன் எண்களுக்கும் பயன்படுத்த வேண்டும். மொபைல் போன் எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதனையடுத்து தற்போது பயன்பாட்டில் உள்ள பிரிபெய்டு, போஸ்ட் பெய்டு எண்கள் வைத்திருப்பவர்கள் ஆதார் எண்களை 2018 பிப்ரவரிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு வழங்காத பட்சத்தில் 2018 பிப்ரவரி 6க்கு பின் மொபைல் போன் இணைப்பு துண்டிக்கப்படும்.