Breaking News
இந்தியா ஓபன் பாட்மிண்டன்: பி.வி.சிந்து சாம்பியன்- ஒலிம்பிக் தோல்விக்கு பதிலடி

இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை யான பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

டெல்லியில் நடைபெற்றுவரும் இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொட ரில் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்பெயினின் கரோ லினா மரினை எதிர்த்து ஆடினார். ஒலிம்பிக் போட்டி இறுதி ஆட்டத்தில் மரினிடம் தோற்ற பி.வி.சிந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இப்போட்டியில் ஆவேசமாக ஆடினார்.

முதல் செட்டின் முதல் புள்ளியை மரின் எடுத்தபோதிலும் அடுத்தடுத்து 6 புள்ளிகளைப் பெற்று சிந்து முன்னிலை பெற்றார். அவரது முன்னிலையைக் குறைக்க கரோலினா மரின் போராட, ஆட்டம் விறுவிறுப்படைந்தது. இதில் கல்ரோலினா மரின் அடிக்கடி பந்தை களத்துக்கு வெளியில் அடித்தது சிந்துவுக்கு சாதகமாக இருந்தது. இறுதியில் சிந்து 21-19 என்ற புள்ளிக்கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

முதல் செட்டை வென்ற கையோடு ஆக்ரோஷமாக 2-வது செட்டை ஆடிய பி.வி.சிந்து தனது அருமையான பிளேசிங்கால் கரோலினா மரினை திணறடித்து மின்னல் வேகத்தில் முன்னிலை பெற்றார். ஆட்டம் கைவிட்டு போவதை உணர்ந்த கரோலினா மரின் சோர்ந்து போனார். இதைப் பயன்படுத்திக்கொண்ட சிந்து 21-16 என்ற புள்ளிக்கணக்கில் 2-வது செட்டையும் கைப்பற்றினார்.

இதன்மூலம் 21-19, 21-16 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தோற்றதற்கு பதிலடி கொடுத்தார். சிந்துவின் வெற்றியை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

ஆண்களுக்கான பிரிவில் நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான டென்மார்க்கின் விக்டர் அலெக்சென் 21-13, 21-10 என்ற நேர் செட்களில் தைவானின் சோ டீன் சென்னை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.