Breaking News
பாலியல் குறித்து பேச வெட்கப்படுகிறது இந்தியா: நடிகை ராதிகா ஆப்தே

பாலியல் மற்றும் உடல் சம்பந்தமாக எது இருந்தாலும் அதுகுறித்து பேச இந்தியா மக்கள் வெட்கப்படுகின்றனர் என பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

பத்லாபூர், ஹன்டர், ஃபோபியா உள்ளிட்ட இந்தி படங்களிலும், கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் நடித்தவர் ராதிகா ஆப்தே. தற்போது, பால்கி இயக்கத்தில் ‘பாட்மேன்’ (PadMan) திரைப்படத்தில் அக்‌ஷய் குமார், சோனம் கபூர் ஆகியோருடன் நடித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் எப்படி சானிடரி நாப்கின் தயாரித்தார் என்பது பற்றிய உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் இது.

இதுகுறித்து அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், “நமது தேசம் பாலியல், உடல் மற்றும் உடல் உறுப்புகள் சம்பந்தமாக எது இருந்தாலும் பேச வெட்கப்படுகிறது. மனித உடல் சம்பந்தமாக எது பேசினாலும் இங்கு பிரச்சினைதான்.

தலைமுறை தலைமுறையாக சில விஷயங்களை நாம் விசித்திரமாக அணுகி வருகிறோம். நான் இனி அப்படி நினைக்க மாட்டேன் என முடிவெடுத்தால் மட்டுமே மாற்றம் வரும். நாப்கின்களை எல்லார் முன்னாலும் கையில் வைத்து தொட்டுப்பார்ப்பது விசித்திரமாக இருக்கக் கூடாது. இது போன்ற சின்ன சின்ன விஷயங்களில் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது.

ஆண்கள் மட்டுமல்ல, பெண்களுக்குக் கூட இது போன்ற விஷயங்களை பேசுவதில் சிக்கல் இருக்கிறது. நமது வளர்ப்பும், சமுதாயமுமே இதற்குக் காரணம். அது மாறவேண்டிய நேரம் இது. பாட் மேன் போன்ற ஒரு படம் இந்த அளவில் பாலிவுட்டில் எடுக்கப்படுவது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.