இரட்டை இலை சின்ன விவகாரத்தில் கைதான சுகேஷை ஆஜர்படுத்த நீதிபதிகளை தேடி அலைந்த டெல்லி போலீஸார்
டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதிகள் இல்லாததால் சுகேஷை ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுக்க முடியாமல் போலீஸார் திணறிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
டெல்லி 5 நட்சத்திர ஹோட்ட லில் போலீஸார் சோதனை நடத்தி னர். இதில் ரூ.1.3 கோடியுடன் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாககூறியுள்ளார்.
பின்னர் போலீஸார் அவரை பாட்டீயாலா நீதிமன்ற வளாகத் துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நீதிபதியின் வரவுக்காக போலீஸார் பல மணிநேரம் காத்திருந்தனர். ஆனால் நீதிபதி வரவில்லை. இதைத் தொடர்ந்து அங்கிருந்து 20 நிமிட பயண தூரத்தில் அமைந்திருக்கும் டிஸ் ஹசாரி நீதிமன்றத்துக்கு சுகேஷை அழைத்துச் சென்றனர். அதற்குள் மாலை 4.40 மணியாகி இருந்தது. இதனால் அவசரமாக அங்குள்ள நீதிமன்ற அறை எண் 25-க்கு சென்றபோது, சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரி அரைநாள் விடுப்பில் வீட்டுக்கு சென்றிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 313-வது அறையில் அமர்ந்திருக்கும் சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன்னிலையில் சுகேஷை ஆஜர் படுத்த அழைத்துச் சென்றனர். ஆனால் அவரும் அங்கு இல்லை. அடுத்ததாக 139-வது அறையின் சிறப்பு நீதிபதி ஹேமணி மல்ஹோத்ராவை நோக்கி போலீஸார் சென்றனர். அவரும் அறையில் காணப்படவில்லை.
பின்னர் தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் சதீஷ் குமார் ஆரோராவின் 38-வது அறை கதவைத் தட்டினர். அங்கும் போலீஸாரின் துரதிருஷ்டம் துரத்தியது.
கடைசியில் அரைநாள் விடுப்பு எடுத்த சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரியின் வீட்டுக்கு நேரடியாக சுகேஷை அழைத்துச் சென்று போலீஸார் ஆஜர்படுத்தினர். அதன்பிறகே 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸா ருக்கு உத்தரவு கிடைத்தது.