மனைவியை கொன்ற இந்தியரை பிடிக்க எப்.பி.ஐ., தீவிரம்
அமெரிக்காவில், மனைவியை கொன்ற இந்தியரை, மிக அதிகமாக தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து, அந்நாட்டு புலனாய்வு அமைப்பான, எப்.பி.ஐ., தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த, பத்ரேஷ்குமார் சேத்தன்பாய் படேல், 26, தன், 21 வயது மனைவி பாலக் உடன், இரு ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், ஒரு கடையில் வேலை பார்த்து வந்தான். ஒரு நாள், தன் மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு, படேல் தலைமறைவானான். அவன், கனடாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், படேலை, அமெரிக்காவில் மிக அதிகமாக தேடப்படும், 10 குற்றவாளிகளின் பட்டியலில், அந்நாட்டு புலனாய்வு அமைப்பான, எப்.பி.ஐ., சேர்த்துள்ளது. படேலை பிடிக்கும் வகையில், அவன் இருப்பிடம் பற்றிய தகவல் அளித்தால், 65 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்றும், எப்.பி.ஐ., அறிவித்துள்ளது.