நடிகர் தனுசுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
தனுஷ் எங்கள் மகன் என தொடரப்பட்ட வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. மதுரை மாவட்டம் மேலுார் கதிரேசன், அவரது மனைவி மீனாட்சி. ‘நடிகர் தனுஷ் எங்கள் மகன். எங்களுக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்,’ என மேலுார் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ‘நான் அவர்களின் மகன் என்பதற்கு, ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. மேலுார் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,’ என உயர்நீதிமன்றக் கிளையில் தனுஷ், மனு தாக்கல் செய்தார். மேலுார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், தனுஷ் பத்தாம் வகுப்புவரை படித்தார் என்பதற்குரிய பள்ளி மாற்றுச் சான்றை கதிரேசன் தரப்பு தாக்கல் செய்தது. அதில் உள்ள அங்க அடையாளங்களை தனுஷ் மறுத்தார். அப்பள்ளி மாற்றுச் சான்றில் உள்ள அடையாளங்களை உறுதிப்படுத்த, தனுஷூக்கு பிப்.,28 ல் உயர்நீதிமன்றக் கிளையில் அங்க அடையாள சோதனை நடந்தது. சோதனை அறிக்கையை மதுரை அரசு மருத்துவமனை டீன் வைரமுத்துராஜூ தலைமையிலான குழு மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலுார் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
சான்றிதழ்களில் குளறுபடி இருப்பதால், டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கதிரேசன் தம்பதி கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
தனுஷ் கோரிக்கையை ஏற்று மேலூர் கோர்ட்டில் கதிரேசன் மீனாட்சி தொடர்ந்த வழக்கை நீதிபதி பி.என். பிரகாஷ் தள்ளுபடி செய்தார்.