Breaking News
மீனவர்களின் படகுகளை விடுவிக்கக்கோரி கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டம் திடீர் வாபஸ்

இலங்கையிலுள்ள படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று அறிவித்திருந்த கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 143 விசைப்படகுகள் விடுவிக்கப்படாமல் உள்ளன. இதுதொடர்பாக கடந்த 7ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த, இருநாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. படகுகளை விரைவில் விடுவிக்க வலியுறுத்தி, இன்று (ஏப். 25) தடையை மீறி படகுகளில் குடும்பத்துடன் கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டத்தை, நடத்த உள்ளதாக ராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர். இதற்கிடையே வரும் மே 12ம் தேதி பிரதமர் மோடி இலங்கை செல்ல உள்ளார். அதற்குள் படகுகளை விடுவிப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும், இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் இன்று ராமேஸ்வரத்தில் நடக்கவிருந்த மீனவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதையொட்டி நேற்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் அல்போன்ஸ் தலைமையில் மீனவர் சங்க பிரதிநிதிகளின் அவசரக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, மீன்பிடி படகுகளை விடுவிக்க வலியுறுத்தியதன் அடிப்படையில் இலங்கையில் விசைப்படகுகள் விடுவிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் படகுகளில் கச்சத்தீவு செல்லும் போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை மீனவர்கள் 7 பேர் படகுடன் அனுப்பி வைப்பு: தூத்துக்குடியில் இருந்து கிழக்கே 58 கடல் மைல் தொலைவில் இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகில் 7 மீனவர்களை கடலோர காவல் படையினர் கடந்த 4ம் தேதி மடக்கிப் பிடித்தனர். ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 7 மீனவர்களும் மாஜிஸ்திரேட் உத்தரவின் ேபரில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கோர்ட் உத்தரவின் பேரில் கடந்த 21ம் தேதி விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள், தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தெர்மல்நகர் போலீஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் அவர்கள் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து பத்திரமாக நேற்று மதியம் படகில் அனுப்பி வைக்கப்பட்டனர். மரைன் போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று கடலில் காத்திருந்த கடலோர காவல் படை கப்பலான வைபவ்வில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களை படகுடன் அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ள கடலோர காவல் படையினர் இன்று (25ம்தேதி) சர்வதேச கடல் எல்லையில் காத்திருக்கும் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.