Breaking News
குஜராத் லயன்ஸ் அணியுடன் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 8 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளை பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் ரத்தானது. இதனால் அந்த அணி 5 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணி பிளேப் ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உருவாகும். இந்த 6 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்றால் 17 புள்ளிகளை பெறும்.

இந்த நிலை ஏற்பட்டால் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி, ரன்ரேட் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் பெங்களூரு அணியின் தலைவிதி நிர்ணயம் செய்யப்படும். இதனால் குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இருந்தே பெங்களூரு அணியின் வாழ்வா? சாவா போராட்டம் தொடங்குகிறது.

ஏற்கெனவே தள்ளாடிய நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிராக 49 ரன்களில் சுருண்டது, ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானது ஆகியவை பெங்களூரு அணிக்கு கடும் பின்னடைவை கொடுத்துள் ளது. அணியின் பிக் 3 என வர்ணிக் கப்படும் விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோர் இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக சொதப்பி வருகின்றனர்.

ஒட்டுமொத்த அணியின் பேட்டிங்கும் இவர்கள் 3 பேரை மட்டுமே நம்பியிருப்பதே பெரிய பலவீனமாக உள்ளது. ஆல்ரவுண்டர்களான வாட்சன், ஸ்டூவர்ட் பின்னி மற்றும் விக்கெட் கீப்பரான கேதார் ஜாதவ் ஆகியோர் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

இதனால் பேட்டிங்கில் முன்னணி வீரர்கள் பெரிய அளவில் எழுச்சி பெற்றால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும் என்ற சூழல் உள்ளது. அதேவேளையில் பந்து வீச்சில் அணி பலமாகவே உள்ளது. யுவேந்திர சாஹல், சாமுவேல் பத்ரி, பவன் நெகி ஆகியோர் சுழலில் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் இந்த கூட்டணி குஜராத் அணிக்கு நெருக்கடி தரக்கூடும்.

குஜராத் அணியும் இந்த சீசனில் மந்தமாகவே விளையாடி வருகிறது. அந்த அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 5 தோல்விகளை பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அணியின் பேட்டிங் வலுவாக உள்ள நிலையில் பந்து வீச்சு பலமற்ற நிலையில் காணப்படுகிறது.

இதுவரை இந்த தொடரில் அந்த அணி பந்து வீச்சாளர்கள் ஒட்டுமொத்தமாக 26 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றி உள்ளனர். முக்கிய பந்து வீச்சாளராக கருதப்படும் ஜடேஜா இதுவரை சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை. பிரவீன் குமாரின் பந்து வீச்சும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஆறுதல் விஷயமாக கேரளாவை சேர்ந்த பாசில் தம்பி மட்டுமே ஓரளவு சிறப்பாக பந்து வீசி வருகிறார். யார்க்கர்கள் வீசும் அவரது திறன் எதிரணியின் ரன்குவிப்பை சிறிது கட்டுப்படுத்துவதாக உள்ளது.

டிவைன் பிராவோக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள இர்பான் பதான் இன்று களமிறங்கு கிறார். மேலும் ஹாட்ரிக் உட்பட 9 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள ஆன்ட்ரூ டையும் உடல் தகுதியை பெற்றுள்ளதால் பந்து வீச்சு பலம் பெறக்கூடும் என கருதப்படுகிறது.

கொல்கத்தாவுக்கு எதிராக 46 பந்துகளில் 84 ரன்கள் குவித்த சுரேஷ் ரெய்னாவிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். இந்த தொடரில் அவர் இதுவரை 275 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் 264 ரன்கள் சேர்த்துள்ள பிரண்டன் மெக்கலமும் பேட்டிங்கில் மிரட்ட தயாராக உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.