Breaking News
சிதைக்கப்பட்ட ராணுவ வீரர்களின் உடல் பாகங்கள் பாகிஸ்தான் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த இந்திய படையினர் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 1–ந் தேதி தாக்குதல் நடத்தினர். அதில் பலியான 2 இந்திய வீரர்களின் உடல்களை அவர்கள் சிதைத்து விட்டு சென்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், தங்கள் ராணுவம் இதில் ஈடுபடவில்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது. ஆதாரம் கோரியது. இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் ஏ.கே.பட், பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் சாகிர் ‌ஷம்சத் மிர்சாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கண்டனம் தெரிவித்தார்.

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பசிட்டை மத்திய அரசின் வெளியுறவு செயலாளர் நேற்று நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கோபால் பக்லே நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 2 இந்திய வீரர்கள் கொலையிலும், அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டதிலும் பாகிஸ்தான் ராணுவத்தின் பங்கை நிரூபிக்க தேவையான ஆதாரம் இந்தியாவிடம் உள்ளது. சம்பவ இடத்தில் சிந்திய ரத்தம், எல்லை கட்டுப்பாட்டு கோடுவரை நீள்கிறது.

இது, இந்த பாதகத்தை செய்தவர்கள், பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்றதை காட்டுகிறது. எனவே, பாகிஸ்தான் தூதர் அப்துல் பசிட்டை நேரில் வரவழைத்து, பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர்புக்கு ஆதாரம் இருப்பதாக இந்திய வெளியுறவு செயலாளர் தெளிவுபட தெரிவித்துள்ளார். இதை கோபமூட்டும் செயலாக இந்திய அரசு பார்ப்பதாகவும் அப்துல் பசிட்டிடம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்துக்கு இதில் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் தூதர் மறுத்தார். இருப்பினும், இந்தியாவின் உணர்வுகளை பாகிஸ்தான் அரசிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்தார் என்றார்.

கிருஷ்ணா காதி பகுதியை ஒட்டியுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளுடன் உயிரிழந்த 2 இந்திய வீரர்களின் ரத்த மாதிரிகள் பொருந்துகின்றன. எனவே, இந்திய வீரர்களை படுகொலை செய்ததில் பாகிஸ்தான் படை ஈடுபட்டிருப்பதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாக இந்தியா உறுதியுடன் நம்புகிறது. சதிகாரர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியப் பகுதிக்குள் நுழைந்துவிட்டு, பிறகு அதே வழியில் திரும்பி சென்றிருப்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டியும் ரத்த துளிகள் காணப்படுகிறது, இது கொல்லப்பட்ட வீரர்களின் உடல் பாகங்கள் பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது என்பதை உறுதிசெய்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.