அமெரிக்காவில் சீக்கியர் குத்திக்கொலை
பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவை சேர்ந்த ஜெக்ஜீத்சிங் (வயது 32) 18 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்று மாடெஸ்டோ நகரில் உள்ள தனது சகோதரி குடும்பத்துடன் தங்கியிருந்தார். அங்குள்ள ஒரு மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்தார். அந்த கடைக்கு வந்த ஒரு அமெரிக்கர் சிகரெட் கொடுக்கும்படி கேட்டார். அதற்கு ஜெக்ஜீத்சிங் அவரிடம் அடையாள அட்டையை காட்டும்படி கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் கோபமாக இனவெறியுடன் திட்டிவிட்டு சென்றுவிட்டார். 30 நிமிடங்களில் திரும்ப கடைக்கு வந்த அவர், ஜெக்ஜீத்சிங்கை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார். படுகாயம் அடைந்த ஜெக்ஜீத்சிங் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் கடை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வருகிறார்கள்.
இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரிடம் பேசியுள்ளார். அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் 3 இந்திய வம்சாவளியினர் கொல்லப்பட்டுள்ளனர்.