சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடர் இந்திய அணியில் ரோகித், ஷமி
இங்கிலாந்தில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த ஆல் ரவுண்டர் ரோகித் ஷர்மா, வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி இருவரும் இடம் பெற்றுள்ளனர்.
ஐசிசி மினி உலக கோப்பை என பெயர் பெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டித் தொடர், இங்கிலாந்தில் ஜூன் 1ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஐசிசி தரவரிசையில் டாப் 8 அணிகள் களமிறங்க உள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிர்வாக அமைப்பு மற்றும் வருவாய் பகிர்வில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அணியை அறிவிப்பதற்கான கெடு ஏப்ரல் 25ம் தேதியுடன் முடிவடைந்த நிலையிலும், பிசிசிஐ மட்டும் அணியை அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுவினர் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் இது குறித்து விவாதித்த நிர்வாகிகள், சாம்பியன்ஸ் டிராபியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி பங்கேற்பதை உறுதி செய்ததுடன், 48 மணி நேரத்துக்குள்ளாக வீரர்கள் தேர்வு நடத்தப்பட்டு அணி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினர் நேற்று கூடி வீரர்களை தேர்வு செய்தனர். விராத் கோஹ்லி தலைமையில் மொத்தம் 15 வீரர்கள் அடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக சமீபத்திய சர்வதேச போட்டிகளில் விளையாடாத ரோகித், ஷமி இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர். அதே போல, ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர் ஓய்வெடுத்து வந்த சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் முழு உடல்தகுதியுடன் தயாராகி உள்ளார். அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து வரும் கே.எல்.ராகுலுக்கு பதிலாக ஷிகர் தவான் இடம் பெற்றுள்ளார்.
பி பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகளுடன் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஜூன் 8ம் தேதி இலங்கை, ஜூன் 11ல் தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது. மாற்று வீரர்கள் பட்டியலில் ரெய்னா, ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், அஜிங்க்யா ரகானே, மணிஷ் பாண்டே, யுவராஜ் சிங், கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், ஹர்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.