பலாத்கார குற்றவாளியை பொது இடத்தில் தூக்கில் போடுங்கள்
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கொடூரமான முறையில் பலாத்காரத்துக்கு உள்ளாகி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 4 குற்றவாளி களுக்கு சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனையை உறுதி செய்து சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதுகுறித்து நடிகர், நடிகைகள் கூறும்போது, குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை, பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என கருத்து தெரிவித்திருக்கின்றனர். நடிகை டாப்ஸி கூறும்போது,’கடைசியில், நீதி தாமதமானாலும் மறுக்கப்படவில்லை.
இதுபோன்ற பலாத்கார குற்றவாளிகள் வலியை உணரும் வகையில் இன்னமும் கொடூரமான வழியில் தண்டிக்கப்பட வேண்டும்’ என குறிப்பிட்டார். நடிகை ரவீணா,’நிர்பயாவின் தாய் விட்ட கண்ணீருக்கு நீதி கிடைத்திருக்கிறது. தாயும், மகளும் இப்போது நிம்மதி அடைவார்கள். ஒவ்வொரு தீயவர்களும் அவர்கள் செய்யும் குற்றங்களுக்கு தகுந்த விலை கொடுத்தாக வேண்டும் என்பதை உணர வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இந்தி நடிகர் ரிஷி கபூர்,’நிர்பயா தீர்ப்பின் மூலம் நீதி வென்றிருக்கிறது. இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் பொது இடத்தில் தூக்கிலிடப்பட வேண்டும். மக்கள் சமுதாயத்தில் இது தேவையான ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் தவறு செய்பவர்களுக்கு இதுவொரு அச்சுறுத்தலுக்கான உதாரணமாக இருக்கும்’ என தெரிவித்திருக்கிறார்.