Breaking News
மும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்

ஐபிஎல் டி20 தொடரில் தவான் சிறப்பாக ஆட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது.ஐதராபாத், ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்தது. சிம்மன்ஸ், பார்திவ் இன்னிங்சை தொடங்கினர். சிம்மன்ஸ் 1 ரன் மட்டுமே எடுத்து நபி பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். ராணா 9 ரன், பார்திவ் 23 ரன் எடுத்து சித்தார்த் கவுல் வேகத்தில் பெவிலியன் திரும்ப, மும்பை இந்தியன்ஸ் 6.1 ஓவரில் 36 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. கேப்டன் ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா இருவரும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்த போராடினர்.

இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தது. ஹர்திக் 24 பந்தில் 15 ரன் எடுத்து ரஷித் கான் சுழலில் ஹென்ரிக்ஸ் வசம் பிடிபட்டார். ரோகித் ஷர்மா 67 ரன் (45 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சித்தார்த் கவுல் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். போலார்டு, கரண் ஷர்மா தலா 5 ரன்னில் வெளியேறினர். மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்தது. ஹர்பஜன் 1 ரன், மெக்லநாகன் 2 ரன்னுடன் களத்தில் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் கவுல் 4 ஓவரில் 16 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். புவனேஷ்வர் 2, நபி, ரஷித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதையடுத்து, 20 ஓவரில் 139 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சன்ரைசர்ஸ் களமிறங்கியது. மெக்லநாகன் வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரின் முதல் பந்தில் துவக்க ஆட்டக்காரர் கேப்டன் வார்னர் (6) ஆட்டமிழந்தார். ஆனாலும், தவான், ஹென்ரிக்ஸ் ஜோடி பொறுப்புடன் ஆடி அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தது. இந்த ஜோடி 91 ரன் சேர்த்த நிலையில், ஹென்ரிக்ஸ் (44 ரன், 35 பந்து) பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் தவான் 36 பந்தில் அரைசதம் அடித்தார். யுவராஜ் சிங் 9 ரன்னில் மலிங்கா வேகத்தில் வெளியேறினார். இறுதியில், தவான், தமிழக வீரர் விஜய் சங்கர் நிதானமாக ஆடி, வெற்றியை எட்டினர்.

சன்ரைசர்ஸ் அணி 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களுடன் மும்பையை வென்றது. தவான் 62 ரன் (46 பந்து), விஜய் சங்கர் 15 ரன்களுடன் (12 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. சன்ரைசர்ஸ் தனது கடைசி போட்டியில் புனேவை சந்திக்கிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள மும்பை ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.