போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்படுவதால் பயணிகள் அவதி
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13–வது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை போக்குவரத்து தொழிலாளர்கள் வற்புறுத்தி வந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி 15–ந் தேதி (இன்று) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்து இருந்தனர். எனவே இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் வேலை நிறுத்தம் தொடங்கியது.
சென்னையில் பேருந்துகள் ஓடாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆட்டோக்கள், டாக்ஸிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையின் புறநகர் பகுதிகளிலும் பேருந்து இல்லாமல் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். தவிர, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓடிய அரசுப்போருந்துகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.
காஞ்சிபுரம், கோவை, சேலம், நெல்லை, விருதுநகர், தஞ்சை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, கரூர், தேனி மற்றும் வேலூரில் குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் 23-பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணாநகரில் மாநகர அரசுப்பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. பெரம்பலூர் பணிமனையில் 110-பேருந்துகளில் ஒரு பேருந்து கூட இதுவரை இயக்கப்படவில்லை; திருச்சி மாவட்டத்தில் 90% அரசுப்பேருந்துகள் இயக்கப்படவில்லை. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.