ஹாஜி மஸ்தான் கதையில் படமா? ரஜினிகாந்த்துக்கு திடீர் மிரட்டல்
மும்பை தாதா ஹாஜி மஸ்தான் கதையை படமாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஜினிகாந்த்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கபாலி படத்துக்குப் பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, வரும் 28ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. ஹீரோயின் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் முடிவாகவில்லை. ரஜினிகாந்த் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் கதை, மும்பையில் வாழ்ந்து மறைந்த பிரபல தாதா ஹாஜி அலி மஸ்தானின் வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகிறது என்று, இணையதளங்களில் தகவல் வெளியானது.
இதையடுத்து, மும்பையிலுள்ள ஹாஜி அலி மஸ்தான் குடும்பத்தினர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து அவரது வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிர்ஸா கூறும்போது, ‘ஹாஜி அலி மஸ்தான் வாழ்க்கையை படமாக எடுத்தால் ரஜினியும் படக்குழுவும் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். எங்களிடம் பேசி, நல்ல முறையில் அவரது கதையை எடுத்தால் மட்டுமே அனுமதி தர முடியும்’ என்றார். இதுகுறித்து இயக்குனர் ரஞ்சித்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
மிரட்டல் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. இது கண்டிப்பாக ஹாஜி அலி மஸ்தான் கதை கிடையாது. மேலும், இது கேங்ஸ்டர் கதையும் கிடையாது. படத்துக்கு கபாலி 2 என்றும் பெயர் சூட்டவில்லை. சினிமா ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டு இருப்பதால், படப்பிடிப்பு தேதி இன்னும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே ரஜினிக்கு சுந்தர் சேகர் மிர்ஸா அனுப்பியுள்ள கடிதத்தில் ஹாஜி மஸ்தான் கதையை படமெடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.