பாகிஸ்தானில் 25 ரூபாய் சம்பளம் கேட்ட ஆப்கன் சிறுவன் கொலை
பாகிஸ்தானில் ஆப்கனைச் சேர்ந்த 15 வயது சிறுவன் 25 ரூபாய் சம்பளம் கேட்டதற்காக கொல்லப்பட்ட துயர சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானின் டான் செய்தி நிறுவனம், “பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள கரிமாபாத் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று மாடிப்படிகளை துடைத்ததற்காக அடுக்குமாடி உரிமையாளரிடம் 25 ரூபாய் சம்பளம் வழங்குமாறு கேட்டிருக்கிறார்.
இதில் கோபமடைந்த வீட்டு உரிமையாளர் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிறுவன் பலியானார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட சிறுவன் ஆப்கனை சேர்ந்தவர் என்றும், குடும்ப வறுமையின் காரணமாக தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடம் பாகிஸ்தானில் தங்கி வேலை செய்து வந்துள்ளார் என்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனை கொலை செய்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக பாகிஸ்தானில் 3 ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்ட 13 வயது சிறுவன் கை வீட்டு உரிமையாளரால் வெட்டப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில் சிறுவன் ஒருவன் வீட்டு உரிமையாளரால் கொலை செய்யப்பட்டுள்ளது பாகிஸ்தானில் குழந்தைகள் நல அமைப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.