Breaking News
ஹாக்கியில் ஹாட்ரிக் தோல்வி: தொடரை இழந்தது இந்திய அணி

மகளிர் ஹாக்கியில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3-வது ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் தோல்வியால் இந்திய அணி தொடரை இழந்தது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கிலும் 2-வது ஆட்டத்தில் 2-8 என்ற கணக்கிலும் தோல்வியடைந்திருந்தது.

இந்நிலையில் நேற்று 3-வது ஆட்டத்தில் இரு அணிகளும் புகேகோஹே நகரில் மீண்டும் மோதின. 9-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை தீப் கிரேஸ் கோலாக மாற்ற இந்திய அணி தொடக்கத் திலேயே 1-0 என முன்னிலை பெற்றது.

ஆனால் அடுத்த 4-வது நிமிடத்திலேயே நியூஸிலாந்து பதிலடி கொடுத்தது. பெனால்டி கார்னர் மூலம் எலா குன்சன் அடித்த இந்த கோலால் ஆட்டம் 1-1 என சமநிலையை எடிட்டியது. 15-வது நிமிடத்தில் நியூஸிலாந்து அணி 2-வது கோலை அடித்தது.

டீனா ரிட்சி அடித்த இந்த பீல்டு கோலால் நியூஸிலாந்து 2-1 என முன்னிலை பெற்றது. இந்த கோலை அடிக்க அவருக்கு கேப்டன் ஸ்டேசி மைக்கேல்சன் உதவியாக இருந்தார். ஆட்டத்தின் 2-வது பகுதியில் இந்திய அணிக்கு இருமுறை கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 26-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கிடைத்த இரு பெனால்டி கார்னர்களை கேப்டன் ராணி கோலாக மாற்ற தவறினார்.

அவர் அடித்த முதல் பெனால்டி கார்னரை, நியூஸிலாந்து வீராங்கனைகள் கோல் விழ விடாமல் தடுத்தனர். 2-வது பெனால்டி கார்னர், நியூஸிலாந்து கோல் கீப்பர் சாலி ருதர்போர்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. 39-வது நிமிடத்தில் நியூஸிலாந்து அணி 3-வது கோலை அடித்து அதிர்ச்சி கொடுத்தது. இந்த கோலை ஷிலோ குளோயின் அடித்தார்.

43-வது நிமிடத்தில் நியூஸிலாந்து அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணியின் கோல் அடிக்கும் முயற்சியை இந்திய கோல் கீப்பர் சவிதா சிறப்பாக தடுத்தார். ஆட்டம் முடிவடைய ஒரு நிமிடமே இருந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது கோலை அடித்தது.

பெனால்டி கார்னர் மூலம் இந்த கோலை மோனிகா அடித்தார். ஆனால் அதன்பிறகு இந்திய அணியால் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்க முடியாமல் போனது. முடிவில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை நியூஸிலாந்து 3-0 கைப்பற்றி உள்ளது. 4-வது போட்டி நாளை நடைபெறுகிறது.

100-வது போட்டி

இந்திய அணியின் முன்கள வீராங்கனையான சுனிதா லக்ரா நேற்றைய ஆட்டத்தில் விளையாடியதன் மூலம் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 2009-ம் ஆண்டு அறிமுகமான அவர் இந்திய அணியின் முதுகெலும்பாக இருந்து வருகிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.