விமர்சகர்களால் ‘பாகுபலி 2’-ல் ஒரு காட்சியைக் கூட எடுக்க முடியாது: சமுத்திரக்கனி சவால்
விமர்சகர்களால் ‘பாகுபலி 2’-ல் ஒரு காட்சியைக் கூட எடுக்க முடியாது என்று இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் ‘பாகுபலி 2’. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘பாகுபலி 2’ படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது ‘பாகுபலி 2’.
அப்படம் வெளிவந்த சமயத்தில் “‘பாகுபலி 2’ 100 முறை பார்க்கலாம். பார்க்கணும். உன்னதமான உழைப்பு” என்று தெரிவித்த சமுத்திரக்கனி, அதனை தவறாக விமர்சித்தவர்களையும் கடுமையாக சாடி ட்வீட் செய்தார். ஆனால், விமர்சகர்களை சாடிய ட்வீட்டை நீக்கிவிட்டார்.
‘தொண்டன்’ படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக அளித்துள்ள பேட்டியில், ‘பாகுபலி 2’ ட்வீட் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “20 வருடங்களாக திரையரங்கம் பக்கம் வராத மக்களை திரையரங்குக்கு அழைத்து வந்த இயக்குநர் ராஜமெளலியை வணங்குகிறேன்.
அனைத்து விமர்சகர்களுக்கும் சவால் விடுகிறேன். அவர்களால் ‘பாகுபலி 2’-ல் ஒரு காட்சியைக் கூட எடுக்க முடியாது. எனக்கு வெற்றி பெற்றவர்களையும், இரண்டாம் இடம் பெறுபவர்களையும் பிடிக்கும். ஆனால் மைதானத்துக்கு வெளியே நின்று கொண்டு கருத்து மட்டும் கூறுபவர்களைப் பிடிக்காது.
ஒரு நல்ல விமர்சகர், போராடும் இயக்குநர்களுக்கு கை கொடுக்க வேண்டும். நல்லது கெட்டதை அவர்கள் சொல்லலாம் ஆனால் அது ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில், எந்த எதிர்மறை கருத்துகளையும் நான் மனதில் ஏற்றுக்கொள்வதில்லை.” என்று பதிலளித்துள்ளார் சமுத்திரக்கனி.