சீனாவை விட இந்தியாவில் தான் மக்கள்தொகை அதிகம் : அடித்துச் சொல்லும் ஆராய்ச்சியாளர்
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா என பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையில் சீனாவை விட இந்தியாவில் தான் மக்கள்தொகை அதிகம் எனவும், இது பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டு வருவதாகவும் சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் பெக்கிங் பல்கலை.,யில் நடந்த விழாவில் ஆராய்ச்சியாளர் ஷி புசியான் பேசினார். இவர் அமெரிக்காவின் விஸ்கோசின் பல்கலை.,யில் மக்கள்தொகை குறித்த ஆராய்ச்சியாளராக உள்ளார். விழாவில் தனது வாதத்திற்கான ஆதார புள்ளிவிபரங்களையம் அவர் சமர்பித்துள்ளார். அவரது அறிக்கையின்படி, 1991 முதல் 2016 ம் ஆண்டு வரை சீனாவில் புதிதாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 377.6 மில்லியன். ஆனால் இந்தியாவில் 464.8 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன.
தற்போது சீனாவின் மக்கள்தொகை 1.38 பில்லியன் என சொல்லப்படுவது தவறு. அரசின் கணக்கீட்டை விட 90 மில்லியன் குறைவாகவே தற்போது சீனாவில் மக்கள்தொகை உள்ளது. அதாவது 1.29 பில்லியன் மட்டுமே. ஆனால் இந்தியாவின் மக்கள்தொகை 1.32 பில்லியன். இதனை ஐ.நா.,வே தெரிவித்துள்ளது. சீனாவின் மக்கள்தொகை பெருக்கம் குறைந்து வருவதாக ஐ.நா., கணக்கிட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு, இறப்பு விகிதம், பொருளாதார நிலை, பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை குறித்த புள்ளிவிபரம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள்தொகை குறித்த இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.