சட்டசபை வைர விழா சாதனை நாயகருக்கு இன்று பாராட்டு விழா
‘என் உயிரினும் மேலான, அன்பு உடன்பிறப்புகளே…’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதியின்
உதடுகள் உச்சரிக்கும் போது, தொண்டர்களின் கரவொலி சத்தம் அடங்க, சில நிமிடங்கள் ஆகும். அப்போது, தன் பேச்சை நிறுத்தி, அவர்களின் முகங்களை பார்த்து, கருணாநிதி பரவசம் அடைவார்.
பேச்சாற்றல், எழுத்தாற்றல், ஆளுமை திறன், சமயோசித நையாண்டி பேச்சால், தொடர்ந்து, 60 ஆண்டுகளாக, சட்டசபையில், மக்கள் பிரதிநிதியாக பணியாற்றி வரும் கருணாநிதியின், 94வது பிறந்த நாள் விழா, சட்டசபை வைர விழாவாக, சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், இன்று நடக்கிறது.
அதில், ராகுல், நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், சரத் பவார், பரூக் அப்துல்லா, நாராயணசாமி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, காதர் மொகிதீன், டெரிக் ஓபிரையன் போன்ற தலைவர்கள் பங்கேற்று, கருணாநிதியின் மணிமகுடத்தில், தங்கள் வாழ்த்துகளை, வைரக்கல்லாக பதிக்க உள்ளனர்.
சட்டசபை வைர விழா நாயகராக விளங்கும் கருணாநிதி, திருவாரூர் மாவட்டம், திருக்குவளை கிராமத்தில், 1924 ஜூன், 3ல் பிறந்தார். அவரது பெற்றோர், முத்துவேலர் – அஞ்சுகம். சண்முகசுந்தரம், பெரியநாயகி என்ற இரு சகோதரிகளுடன், கடைசி மகனாக பிறந்தார் கருணாநிதி.