Breaking News
‘நீங்கள் ட்விட்டரில் இருக்கிறீர்களா?’- தொகுப்பாளரின் கேள்விக்கு புன்னகையை பதிலாகத் தந்த மோடி

உலக அளவில் ட்விட்டரில் அதிகம் பேர் பின் தொடரும் தலைவராக இருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், அவரிடம் செய்தி வாசிப்பாளர் ஒருவர் “நீங்கள் ட்விட்டரில் இருக்கிறீர்களா?” எனக் கேள்வி கேட்க புன்னைகையை பதிலாக தந்திருக்கிறார் மோடி.

பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். பீட்டர்ஸ்பெர்க் நகரில் சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள அவர் சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்திருந்தார் என்.பி.சி. (National Broadcasting Company) செய்தி நிறுவனத்தின் தொகுப்பாளர் மேகின் கெல்லி.

விழா அரங்குக்கு வந்த பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரை கைகுலுக்கி வரவேற்றார் கெல்லி. அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, ட்விட்டரில் மேகின் கெல்லி பதிவேற்றியிருந்த புகைப்படம் நன்றாக இருந்ததாகக் கூறியிருக்கிறார். அதற்கு மேகின் கெல்லி, “நீங்கள் ட்விட்டரில் இருக்கிறீர்களா?” என வினவியுள்ளார். மேகின் கெல்லியின் கேள்விக்கு “ஓ யெஸ்..” என்று கூறி புன்னைகையை பதிலாகத் தந்த மோடி, தனது உரையாடலைத் தொடர்ந்தார்.

இந்த உரையாடல் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது. இந்நிலையில், ஒரு செய்தித் தொகுப்பாளராக இருந்துகொண்ட ஒரு நாட்டின் தலைவரிடம் கேள்வி கேட்கும் போதிய முன்னேற்பாடை கெல்லி செய்யவில்லை என விமர்சனங்கள் குவிந்தன.

சிறிது நேரத்தில் ட்விட்டரில் மேகின் கெல்லி ட்ரால் செய்யப்பட்டார்.

ட்விட்டராட்டி ஒருவர், “@megynkelly நீங்கள் ஒரு பத்திரிகையாளர். கேள்விகள் கேட்கும் முன் சிறிதேனும் ஆயத்தமாகியிருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மற்றொரு ட்விட்டராட்டி, “@megynkelly ட்விட்டரில் மோடியைப் பின் தொடர்பவர்களையும் உங்களைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்” எனப் பதிவு செய்திருந்தார்.

ட்விட்டர் சமூக வலைதளத்தில் உலக அளவில் அதிகம் ஃபாலோ செய்யப்படும் தலைவர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ( 31.2 மில்லியன்) அவருக்கு அடுத்ததாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகம் ஃபாலோ செய்யப்படும் தலைவராக இருக்கிறார். அவரை 30.3 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.