Breaking News
மக்கள் வரிப்பணத்தில் சசிகலாவுடன் சந்திப்பா : எம்.பி.,- – எம்.எல்.ஏ.,க்கள் மீது புகார்

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை சந்திக்க, பொதுமக்கள் வரிப்பணத்தை செலவிட்டு வருவதாக எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீது புகார் எழுந்துள்ளது.

கடந்த பிப்.,14ல் இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்கா வழங்கிய நான்கு ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது. ஜெயலலிதா இறந்து விட்டதால் விடுவிக்கப்பட்டார்.

அதன் பின் உள்கட்சி பிரச்னையை பேசுவதற்காக அ.தி.மு.க., அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கார், விமானம் மூலம் பல முறை பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்தனர். இதனால், சிறையிலிருந்து தமிழகம் ஆளப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரு செல்ல, பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து பெறும் ‘பயணப்படி’யை பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.பல லட்சம் வீண் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற தகவல் படி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பயணப்படியாக ஜன., 2016 முதல் மார்ச் 20, 2017 வரை 51 லட்சத்து 90 ஆயிரத்து 655 ரூபாய் பெற்றுள்ளார். இதில் பல முறை பெங்களூரு பயணித்துள்ளார்.

ஆனால், பார்லிமென்ட் அலுவலர்கள் சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை சட்டம் 1953ன் படி துணை சபாநாயகர் டில்லி, சொந்த ஊர், தொகுதிக்கு செல்லுதல், பணி நிமித்தமாக வெவ்வேறு இடங்களுக்கு செல்லுதல் போன்றவற்றுக்கு மட்டுமே பயணப்படியை பயன்படுத்த முடியும்.இது போல தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சென்னையிலிருந்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க பயணப்படியிலிருந்து பல லட்ச ரூபாய் செலவு செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.