Breaking News
ரயில் பயண கட்டணம் விரைவில் உயர்கிறது

ரயில் பயண டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
நாட்டுமக்களில் பெரும்பாலானோர் போக்குவரத்திற்கு ரயில் சேவையையே பயன்படுத்திவருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் குறைந்த பயண செலவு என்பதே ஆகும். இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த ரயில் பயண கட்டணம், இந்தாண்டின் இறுதிவாக்கில் உயர்த்த பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.

உயர்வு ஏன்? :

ரயில்வே நிர்வாகம், நாடெங்குமிலும் பல்வேறு தரங்களில் ஆயிரக்கணக்கான ரயில்சேவைகளை இயக்கி வருகிறது. இந்த ரயில் சேவைகளின் இயக்கத்திற்கு எரிபொருள், ஊழியர் சம்பளம் என பல்வேறு பிரிவுகளில் ரயில்வே நிர்வாகத்திற்கு செலவு உள்ளது. இவற்றில் பயணிகள் ரயில்சேவை மூலம், 57 சதவீதமும் மற்றும் புறநகர் ரயில்சேவைகளின் மூலம் 37 சதவீதமும் வருவாய் கிடைக்கிறது.

ஏசி 3ம் வகுப்பு சேவையின் மூலம் மட்டுமே, ரயில்வே நிர்வாகத்திற்கு கணிசமான லாபம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தங்களுக்கு ஏற்படும் பல்வேறு இழப்புகளிலிருந்து மீள, கடந்த ஏப்ரல் மாதம் ரயில்வே துறை சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது.

இந்த அறிக்கை பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. கட்டண உயர்விற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளாஷ்பேக்

இதற்குமுன் ரயில்வே துறை அமைச்சராக பதவிவகித்த பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் மேற்குவங்க மாநில தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜி, தங்களது பதவிக்காலத்தில் ஒருமுறை கூட ரயில் பயண கட்டணத்தை உயர்த்தவில்லை.
லாலு பிரசாத் யாதவ், தனது இறுதி பதவிக்காலத்தில் ரயில் பயண கட்டணத்தை 2 முதல் 7 சதவீதம் வரை குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மம்தா பானர்ஜியின் திரிணமூல் கட்சியை சேர்ந்த தினேஷ் திரிவேதி 2012-13ம் ஆண்டில் ரயில்வே அமைச்சராக பதவிவகித்தார். அவர் ரயில் பயண கட்டணத்தை ( கி.மீ. ஒன்றிற்கு 5 காசுகள்) என்றளவிற்கு உயர்த்தியதன் காரணத்தினால், அவர் அந்த பதவியிலிருந்து விலக நேரிட்டது நினைவிருக்கலாம்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.