Breaking News
முடிவுக்கு வந்தது ஐ.எஸ்., : ஈராக் அரசு அறிவிப்பு ஆதிக்கம்

: ஈராக்கில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்ட, அல் நுாரி மசூதியை, அரசு படைகள் மீட்டதன் மூலம், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதாக, அந்நாட்டு பிரதமர் ஹெய்டர் அல் அபாடி தெரிவித்து உள்ளார்.

மேற்காசிய நாடான ஈராக்கில், அரசு படைகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு, பல முக்கிய நகரங்களை கைப்பற்றிய, ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தி வந்தனர். ஒரு கட்டத்தில், முக்கியத்துவம் வாய்ந்த மொசூல் உள்ளிட்ட, பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில், மொசூலில் உள்ள, 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பெரிய மசூதி என்றழைக்கப்படும், அல் நுாரி மசூதியில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், அதை தகர்த்தனர். இதையடுத்து, ஐ.எஸ்., பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஈராக் ராணுவம், மொசூல் நகரை சுற்றி வளைத்தது. ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கிய, ஐ.எஸ்., பயங்கரவாதிகள், மொசூல் நகருக்குள்ளேயே ஒடுக்கப்பட்டனர். பயங்கரவாதிகளால் கைப்பற்றப்பட்டு, தகர்க்கப்பட்ட அல் நுாரி மசூதி, ஈராக் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதன் மூலம், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முழுவதும் ஒடுக்கப்பட்டள்ளதாக, அந்நாட்டு அரசு
தெரிவித்துள்ளது.

இது குறித்து, ஈராக் பிரதமர் ஹெய்டர் அல் அபாடி கூறியதாவது: ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிராக, பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். துவக்கத்தில், பயங்கரவாதிகள் சற்று எழுச்சி பெற்றாலும், ராணுவத்தின் தொடர் நடவடிக்கைகளால், அவர்களின் அட்டகாசங்கள் ஒடுக்கப்பட்டு உள்ளன. வரலாற்று சிறப்புமிக்க, அல் நுாரி மசூதி மீட்கப்பட்டது, ஈராக் மக்களுக்கு பெரு மகிழ்ச்சி அளித்துள்ளது.ஐ.எஸ்., அமைப்பை சேர்ந்த ஒருவர் கூட, சுதந்திரமாக உலவ முடியாத நிலை ஏற்படும் வரை, பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போர் தொடரும். ஈராக்கில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளே இல்லை என்ற நிலை விரைவில் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.