Breaking News
தோனி அசத்தல்; இந்தியாவிடம் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 93 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்தியா 1-0 என முன்னிலை வகித்திருந்தது. நேற்று, மூன்றாவது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் (நார்த் சவுண்டு) நடந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையால், சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக போட்டி துவங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் ஹோப், வில்லியம்ஸ் அறிமுகமாகினர். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

ரகானே அசத்தல்:

இந்திய அணிக்கு ஷிகர் தவான், அஜின்கியா ரகானே ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. கம்மின்ஸ் பந்தில் தவான் (2) அவுட்டானார். ஹோல்டர், கம்மின்ஸ் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த கேப்டன் விராத் கோஹ்லி (11) நிலைக்கவில்லை். பின் இணைந்த ரகானே, யுவராஜ் சிங் ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்த போது தேவேந்திர பிஷூ ‘சுழலில்’ யுவராஜ் (39) சிக்கினார். பொறுப்பாக ஆடிய ரகானே, ஒருநாள் அரங்கில் தனது 18வது அரைசதமடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த போது, கம்மின்ஸ் பந்தில் ரகானே (72) அவுட்டானார்.

தோனி அபாரம்:

மறுமுனையில் அசத்திய தோனி, ஒருநாள் போட்டியில் தனது 63வது அரைசதத்தை பதிவு செய்தார். அபாரமாக ஆடிய இவர், ஹோல்டர் வீசிய 47 வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கேதர் ஜாதவ், வில்லியம்ஸ் பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்தது. தோனி (78), ஜாதவ் (40) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கம்மின்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

குல்தீப் கலக்கல்:

பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எவின் லீவிஸ் (2), சேஸ்(2) ஏமாற்றினர். கெயில் ஹோப்(19), ஷாய் ஹோப் (24), ஹோல்டர்(5) ரன்களில் அவுட்டாகினர். பின் இணைந்த பவல், முகமது ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்தனர். பவல் 30 ரன்களில் ஆட்டமிழக்க, முகமது 40 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் வந்தவர்கள் சொதப்ப, 38.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக தோனி தேர்வு செய்யப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.