எந்த நேரத்திலும் தாக்குவோம்: பாக்., பயங்கரவாதி மிரட்டல்
‘இந்தியாவில் பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளோம்; எந்த நேரத்திலும் அடுத்த தாக்குதல் இருக்கும்,” என, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள, பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவன், சையது சலாவுதீன் கூறியுள்ளான்.
அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவன், சையது சலாவுதீன், 71. சமீபத்தில், அமெரிக்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். அப்போது, சலாவுதீனை, சர்வதேச பயங்கரவாதியாக, அமெரிக்கா அறிவித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த தனியார், ‘டிவி’க்கு அளித்துள்ள பேட்டியில், சையது சலாவுதீன் கூறியதாவது: நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல; விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். காஷ்மீருக்கு இந்தியாவில் இருந்து விடுதலை கிடைக்கும் வரை, எங்கள் போராட்டம் தொடரும். நாங்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக, ஏதாவது ஒரு ஆதாரத்தை அளிக்க முடியுமா?
இதுவரை, இந்தியா மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளோம். இந்தியப் படைகளை குறிவைத்தே எங்கள் தாக்குதல்கள் இருக்கும். இந்தியாவில் எங்களுக்கு அதிக ஆதரவு உள்ளது. இந்தியா மீதான அடுத்த தாக்குதல் எந்த நேரத்திலும் இருக்கும்.
காஷ்மீர் எங்கள் வீடு. எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த, பர்ஹான் வானியை கொன்றதால் தான், ஜம்மு – காஷ்மீரில் பதற்றம் அதிகரித்தது. பர்ஹான் வானியை கொன்ற இந்தியப் படையினரை புதைக்கும் மயானமாக காஷ்மீரை மாற்றுவோம். காஷ்மீர் பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்பட அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவன் கூறியுள்ளான்.