பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் சர்ப்ராஸ் நியமனம்
பாகிஸ்தான் 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்ப்ராஸ் அகமது இருந்து வருகிறார். அவரது தலைமையில் சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி, இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கிடையில் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த மிஸ்பா உல்–ஹக் கடந்த மே மாதத்தில் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். புதிய டெஸ்ட் கேப்டன் யார்? என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் சர்ப்ராஸ் அகமது நியமிக்கப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகரியார்கான் நேற்று அறிவித்தார். பாகிஸ்தான் அணியின் 32–வது டெஸ்ட் கேப்டன் சர்ப்ராஸ் அகமது ஆவார். 2012–ம் ஆண்டுக்கு பிறகு 3 வகையிலான போட்டிக்கும் பாகிஸ்தான் அணிக்கு ஒருவரே கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். ‘பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பதை கவுரவமாக கருதுகிறேன். 3 வகையிலான போட்டியிலும் பாகிஸ்தான் அணியை மேம்படுத்த எனது சிறந்த பங்களிப்பை அளிப்பேன்’ என்று சர்ப்ராஸ் அகமது தெரிவித்துள்ளார்.