பிசிசிஐ சீர்திருத்தத்திற்கு சீனிவாசன் முட்டுக்கட்டை
பி.சி.சி.ஐ.,யில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசன் மற்றும் நிரஞ்சன் ஷா ஆகியோர் லோதா குழு பரிந்துரையை அமல்படுத்த முட்டுக்கட்டை போடுவதாக சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பி.சி.சி.ஐ.,யை சீர்படுத்துவது தொடர்பான லோதா குழு பரிந்துரையை அமல்படுத்துவதை கண்காணிக்க, முன்னாள் சி.ஏ.ஜி., வினோத் ராய் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஏற்கனவே 3 அறிக்கைகள் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், இன்று மேலும் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது.
அதில், 3 மாத கால இடைவெளியில் நாங்கள் 3 அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். புதிய பிசிசிஐ., அமைப்பை உருவாக்குவதற்காக ஒருமித்த கருத்து ஏற்படுத்த குழு முயற்சி செய்தது. இதற்காக, 2 முறை ஆலோசனை கூட்டத்திற்கு நடத்தினோம். ஆனால், எங்கள் மயற்சி வெற்றி பெற முடியவில்லை.
கடந்த ஜூன் 26 ல் நடந்த பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டம், எங்களது முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்தியது. இந்த கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட என்.சீனிவாசன், நிரஞ்சன் ஷா மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், லோதா குழு பரிந்துரையை அமல்படுத்தவதில் முட்டுக்கட்டை போடுகின்றனர். பரிந்துரை அமல்படுத்தப்பட்டால், கிரிக்கெட் சங்கங்கள் கட்டுப்பாடு தங்கள் கைகளை விட்டு சென்றுவிடும் என அஞ்சுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வழக்கு ஜூலை 14க்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதேநேரத்தில், பிசிசிஐ செயலர் அமிதாப் சவுத்ரி பரிந்துரையை அமல்படுத்த தீவிர முயற்சி செய்து வருவதாக கூறியுள்ளது.