இரோம் ஷர்மிளாவிற்கு விரைவில் திருமணம் : கொடைக்கானலில் நடக்கிறது
மணிப்பூர் மாநில சமூக சேவகி இரோம் ஷர்மிளா, இங்கிலாந்து காதலர் தெஸ்மான்ட் ஆன்டனி பெலார்மைனை பதிவுத் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை துவக்கியுள்ளார்.
இரோம் ஷர்மிளா மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப்படை சட்டத்தை வாபஸ் பெறக் கோரி 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தார். அண்மையில் அந்த மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் குறைந்த ஓட்டுகள் வாங்கி தோல்வியை தழுவினார். பின்னர் தமிழகம் வந்த அவர், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் குடியேறினார். அவரும், அவரது இங்கிலாந்து காதலரான தெஸ்மான்ட் ஆன்டனி பெலார்மைன், 55, என்பவரும் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக, சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.
திருமண ஏற்பாடுகள் : நேற்று கொடைக்கானல் பதிவுத்துறை அலுவலகத்தில் சார்பதிவாளர் ராஜேஷ், வழக்கறிஞர்கள் அப்துல் ஹமீது, ராகவேந்திரன் முன்னிலையில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவர்கள் துவக்கினர். பூர்த்தி செய்த படிவத்தை அதற்கான அலுவலரிடம் வழங்கினர். அறிவிப்பு செய்த நாளில் இருந்து, 30 நாட்களில் திருமணம் செய்து கொண்டு, கொடைக்கானலில் வசிக்க உள்ளதாக கூட்டாக தெரிவித்தனர்.
சோர்வடையவில்லை : மணிப்பூரில் 16 ஆண்டுகளாக மக்களுக்காக போராடினேன். தோல்வியை தழுவினாலும் சோர்வடையவில்லை. மணிப்பூரில் தற்போதும் ராணுவத்தினர் கற்பழிப்பு மற்றும் கொலை போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். துப்பாக்கி கலாசாரம் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது.செப்., 17ல் ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் ஐ.நா., சபை நடத்தும் தெற்காசிய முதல் இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வேன். இவ்வாறு இரோம் ஷர்மிளா கூறினார்.