Breaking News
சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை: ரூ.2 கோடி லஞ்சம் கைமாறியது

பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர் விரும்பும், உணவுகளை செய்து கொடுப்பதற்காக, சில கைதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக, கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.பி., ரூபா, தன் உயர் அதிகாரிக்கு அறிக்கை சமர்பித்துள்ளார்.கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.பி.,யாக ரூபா, கடந்த மாதம் 23 ம் தேதி நியமிக்கப்பட்டார். இவர், பொறுப்பேற்றதும், சிறைத்துறையில், பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.இம்மாதம், 10 ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு நடக்கும் பல மோசடிகளை, தன் அறிக்கை மூலம் வெளி கொண்டு வந்துள்ளார்.சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயணாவுக்கு சமர்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலாவுக்கு தனியாக சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர் விரும்பும் உணவு செய்து கொடுப்பதற்கென சில கைதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்காக, தாங்கள் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவ்விஷயத்தில், தாங்கள் பணம் பெறவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைத்துறை டி.ஐ . ஜி.,யான நான், ஆய்வு மேற்கொண்டதை, தங்களுக்கு அறிக்கையாக அனுப்புகிறேன்.இவ்வாறு அவர், அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக, கர்நாடக கன்னட சேனல்களில், நேற்றிரவு பரபரப்பாக செய்திகள் வெளியானது. இது குறித்து ரூபாவிடம் விசாரித்தபோது அவர் ஆய்வு செய்ததையும், அறிக்கை சமர்ப்பித்ததையும் உறுதிபடுத்தினார். இது தொடர்பாக மாநில போலீஸ் டி.ஜி.பி., மற்றும் ஊழல் ஒழிப்பு படையிலும் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.