ரஷ்ய கடல் பகுதியில் கடும் நிலநடுக்கம்
ரஷ்ய கடல் பகுதியில், நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், பசிபிக் பெருங்கடலில் சுனாமி அலைகள் எழ வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், சில மணி நேரங்களுக்கு பின், இந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
ரஷ்யாவின் நிகோல்ஸ்கயோ பகுதியிலிருந்து, 199 கி.மீ., தொலைவில், பசிபிக் பெருங்கடலில்,
நேற்று முன்தினம் இரவு, கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில், 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், பசிபிக் பெருங்கடலில் மிகப்பெரிய அளவிலான சுனாமி அலைகள் எழுவதற்கான வாய்ப்பிருப்பதாக, அமெரிக்க அறிவியல் ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.
எனினும், சில மணி நேரங்களுக்கு பின், அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. இதனால், சுனாமி பீதியில் இருந்த ரஷ்யா மற்றும் அதை சுற்றியுள்ள சில நாடுகளைச் சேர்ந்தோர் நிம்மதி அடைந்தனர். எனினும், வழக்கத்தை விட, கடல் அலைகள் மிகப்பெரிதாக எழுந்தன. சில மணி நேரங்களுக்கு, கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.