ஆதாருக்காக தகவல்களை சேகரிப்பதில் என்ன தவறு? : சுப்ரீம் கோர்ட் கேள்வி
ஆதாருக்காக தனிநபரின் தனிப்பட்ட தகவல்களை எடுப்பதில் என்ன தவறு இருக்கிறது. என சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
சமையல் எரிவாயு, மதிய உணவு, முதியோர் ஓய்வூதியம், வங்கி சேவை மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தொடரப்பட்டுள்ளன. இத்திட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி உள்ளிட்ட 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று ஆதார் வழக்கை விசாரித்தது.
மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ‘. 18 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் கூட பயோமெட்ரிக் மூலம் ஆதார் எண் பதிவு செய்யும்படி வற்புறுத்தப்படுகின்றனர். நலத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயம் என்று வலியுறுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் பலமுறை தெரிவித்தும் கூட, அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண் கேட்டு மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்’ என்று வாதிட்டார்.
தனியார் நிறுவனங்கள் தகவல்களை எடுத்துவருகின்றனர்
தொடர்ந்து நீதிமன்ற அமர்வு சார்பில் : ‛‛ தனியார் நிறுவனங்கள் தனி நபரின் தனிப்பட்ட தகவல்களை எடுத்துவருகின்றனர். உதரணமாக செல்போனில் பாதுகாப்பு அம்சங்களுக்காக கைரேகை பதிவு எடுக்கப்படுகிறது. இணையதளம் பயன்படுத்தும் 99 சதவீதம் பேருக்கு அந்த இணையதளம் எந்த தகவல்களை எடுத்து கொள்கிறது என்ற புரிதல் இல்லை, குறிப்பாக பயணத்திற்காக டிக்கெட் புக் செய்யப்படும் போது அதே குறிப்பிட்ட பயணத்திற்கு ஏற்ற மற்ற விமான, பஸ் சேவைகள் குறித்த விபரம் வருகிறது.
மக்கள் தங்கள் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களை ஆன்லைனில் பரவலாக வெளியிட்டே வருகின்றனர்.தனியார் நிறுவனங்களே தனிநபரின் தனிப்பட்ட தகவல்களை எடுக்கும் போது அரசு எடுப்பதில் என்ன தவறு இருக்கிறது ” என கேள்வி எழுப்பியது.
ஒப்பந்ததை மீறினால் வழக்கு தொடரலாம்
இதற்கு பதிலளித்த சஜன் பூவாயா:‛‛ தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு தகவல்கள் தெரிவிக்கிறோம். மேலும் மக்கள் விருப்பப்பட்டே ஒப்பந்தம் ஏற்படுத்துகின்றனர். தனியார் நிறுவனங்கள் ஒப்பந்ததை மீறினால் வழக்கு தொடரலாம். ஆனால் அரசாங்கத்திடம் எந்த ஒப்பந்தமும் இல்லை.” என வாதிட்டார்.
தகவல்களை சுலபமாக எடுக்க முடியும்
மேலும் டில்லி ஐ.ஐ.டி.யை சேர்ந்த பொருளாதார பேராசிரியர் ரித்திக்கா கூறுகையில் : ‛‛ பயணம், செல்போன், வங்கிகள், உள்ளிட்டவற்றில் ஒரே எண்ணை இணைக்கும் பட்சத்தில் உள்ளாட்சி நிர்வாகமோ, புலணாய்வு துறையோ ஒரு தனி நபர் குறித்த தகவல்களை சுலபமாக எடுக்க முடியும்” இவ்வாறு கூறினார்.