நடிகை தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி படத்திற்கு தடை விதிக்க பாரதீய ஜனதா கோரிக்கை
சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக் கப்பட்டுள்ளது. நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித் துள்ளார். பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் என்பவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார். கவிஞர் மாரிக் முகமது ஜெயாசி எழுதிய கவிதையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஷாகித் கபூர் ராணி பத்மினியின் கணவர் ராவல் ரத்தன் சிங்காகவும் டெல்லியை ஆண்ட சுல்தான் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.
வருகிற டிசம்பர் 1-ந்தேதி பத்மாவதி படம் திரைக்கு வருகிறது. இதற்கிடையே பத்மாவதி படத்துக்கு ரஜபுத்தர மன்னர்களின் வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குஜராத்தில் சட்ட சபை தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்மாவதி படம் வெளியானால் குறிப்பிட்ட பிரிவினர் இடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பா.ஜனதா இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
‘பத்மாவதி’ படத்தை திரையிட தடை விதிக்க கோரி தேர்தல் கமிஷனுக்கு பா.ஜனதா கடிதம் எழுதியுள்ளது. சித்தூர்ராணி பத்மினியின் கதை ஏற்கனவே 1963-ம் ஆண்டு தமிழில் சிவாஜி கணேசன், வைஜெயந்தி மாலா நடிப்பில் திரைப்படமாக வெளியானது. சி.எச்.நாராயண மூர்த்தி இயக்கி இருந்தார்.