Breaking News
கனமழையால் ஆறாக மாறிய சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை: வாகன ஓட்டிகள் அவதி!

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள தெல்லிமேடு ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுகிறது. இதனால் அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதால் கனரக வாகனங்கள் ஊர்ந்தவாறு செல்கின்றன.

மேலும் ஏரி உடைந்துள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழையால் நேற்றிலிருத்தே சாலையில் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில், தற்போது தெல்லிமேடு ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரால் சாலையில் 2 அடிக்கு நீர் தேங்கி ஆறாக காட்சியளிக்கறது. சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும் என்ற நிலையில், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து நேற்றே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் மழை நீரை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள தென்மேலப்பாக்கம், சிங்கப்பெருமாள் கோயில் ஏரிகளும் நிரம்பி வருகிறது. இதனையடுத்து சாலையில் ஓடும் நீர்மட்டம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்துவோர் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.