Breaking News
ஆசிய பயணத்தை தொடங்கினார், டிரம்ப் வட கொரியா விவகாரத்தில் தீர்வு பிறக்குமா?

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதல் முறையாக ஆசிய நாடுகளுக்கு நீண்டதொரு சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக அவர் தனது மனைவி மெலனியா டிரம்புடன் நேற்று முன்தினம் ஹவாய் தீவுக்கு சென்றார். அங்கு அவர் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் அரிசோனா நினைவு சின்னத்துக்கு படகில் சென்றார். அங்கு அவரும் அவரது மனைவியும், வெள்ளைப்பூக்களை தண்ணீரில் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர்.

அங்கிருந்து அவர்கள் ஜப்பான் தலைநகரம் டோக்கியோவுக்கு புறப்பட்டு சென்றார்கள். வடகொரியாவால் கடத்தப்பட்ட ஜப்பானியர்களின் குடும்பங்களையும் டிரம்ப் சந்தித்து பேச ஏற்பாடு ஆகி உள்ளது.

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு, 7–ந் தேதி டிரம்ப் தென்கொரியாவின் தலைநகர் சியோலுக்கு செல்கிறார். 8–ந் தேதி சீன தலைநகர் பீஜிங் செல்கிறார் டிரம்ப்.

10–ந்  தேதி டிரம்ப் தம்பதியர் வியட்நாம் போகிறார்கள்.

12–ந் தேதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு டிரம்ப் தம்பதியர் செல்கின்றனர். 13–ந் தேதி மணிலாவில் ஆசியன் நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அத்துடன் ஆசிய நாடுகளுக்கு டிரம்ப் மேற்கொள்கிற சுற்றுப்பயணம் முடிவுக்கு வருகிறது.

தனது பயணத்துக்கு முன்னதாக வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய டிரம்ப், ‘‘ (ஆசிய தலைவர்கள் சந்திப்பின்போது) நாங்கள் வர்த்தகம் தொடர்பாக பேசுவோம். அதே நேரத்தில் வடகொரியாவுக்கு எதிராக சர்வதேச அளவில் நாடுகளை ஒன்று திரட்டுவோம் என்பதுவும் வெளிப்படையானது. வடகொரியாவுக்கு எதிரான தலைவர்களை பட்டியலிடுவோம். நாடுகளையும் பட்டியல் போடுவோம். என்ன நடக்கிறது என பார்ப்போம். ஆனால் இந்தப் பயணம் வெற்றி பெறும் என நம்புகிறேன்’’ என்று குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.