Breaking News
என்னுடன் இருப்பவர்கள் தவறு செய்தால், ஊழல் செய்தால் நடவடிக்கை எடுப்பேன் – கமல்ஹாசன்

 

சென்னை

தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி,நகரில் #MaiamWhistle என்ற பெயரில் புதிய செல்பேசி செயலியை நடிகர் கமல்ஹாசன் அறிமுக செய்தார். #theditheerpomvaa #maiamwhistle #virtuoscycles என்ற 3 ஹேஷ்டேக்-களை நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்தார்.

விழாவில் கமல்ஹாசன் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-

உண்மைகளை மட்டுமே அனைவராலும் எப்போதும் பேச முடியாததாக உள்ளது.  நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது கனவு. மக்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். அனைத்து தரப்பு மக்களையும் தெரிந்து கொள்வதற்குதான் இந்த பயணம்.

தவறான ஆட்களிடம் தானத்தை கொடுப்பது கூட தவறுதான். நல்லதை செய்தால் மட்டும் போதாது அதை சரியான மக்களுக்கு சரியான நேரத்தில் செய்ய வேண்டும். தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் தற்போது பழுதடைந்துள்ளது, பழுதை சரிசெய்ய மக்கள் ஒன்று திரள வேண்டும். அக்கிரமங்களுக்கு எதிராக தரப்படும் குரல் குறைந்துவிட்டதாகக் கருதுகிறேன்.

கட்சியின் பெயரை அறிவிக்க இப்போது அவசியமில்லை; அவசரமில்லை. அரசியல் கட்சித் தொடங்குவதற்கான ஆயுத்த பணிகளை தொடங்கி இருக்கிறேன். அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என காத்து கொண்டு இருக்கிறேன். சினிமா எடுப்பதற்கே 6 மாத முன்னேற்பாடுகள் செய்பவன் நான்; அரசியல் அதைவிடப் பெரிய பணி. நான் அரசியல் பொறுப்புக்கு வந்தால், என்னை நோக்கியும் கேள்விகள் எழுப்பப்படலாம்.

மக்கள் பிரச்சனைகளை பற்றிப் பேச #theditheerpomvaa #maiamwhistle #virtuouscycles என்ற ஹேஷ்டேக்கில் பேசலாம். புதிய செல்போன் செயலிக்கு “மையம் விசில்” என பெயிரிடப்பட்டுள்ளது, நியாயத்திற்காக குரல் எழுப்பும் கருவி “மையம் விசில்”. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

அரசியலுக்கு வந்துவிட்டேன் என்பதை சொல்லிவிட்டேன். என்ன செய்ய போகிறேன் என்பது தான் இனி.

என்னுடன் இருப்பவர்கள் தவறு செய்தால், ஊழல் செய்தால் நடவடிக்கை எடுப்பேன்.

தவறான வழியில் வரும் பணத்தை என் நிறுவனத்திற்குள்ளே நான் அனுமதிப்பதில்லை, நான் ஆரம்பிக்கும் கட்சியிலும் அனுமதிக்க மாட்டேன்

உண்மையை சொன்னதற்கு தண்டனை கொடுத்தால் எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ, அப்படி எதிர்கொள்வேன். இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. எந்த மதமானாலும், எவரானாலும் வன்முறையில் ஈடுபடக்கூடாது; தலைவரை நேரடியாக பார்த்து மகிழ்ச்சி அடைவதால் மக்களுக்கு பலன் தரப்போவதில்லை.

பிராமண சமுதாயத்தை நான் தேடிப்போனதே கிடையாது; எல்லா சமூகத்திலும் எனக்கு நண்பர்கள் உண்டு;  நான் பிறந்த குலத்திலிருந்து விலகி வந்தவன் நான்; என்னை இப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்; என்னை நாத்திகன் என்று அழைப்பதை நான் ஏற்கவில்லை. சமூகம் பார்த்து நான் என்றும் நட்பு கொள்வது கிடையாது.

ஜனவரி மாதம் முதல் அனைத்து அறிவிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரும்.
கொசஸ்தலை ஆறு குறித்த விவாதம் எழுந்துள்ளதை சிறிய முன்னேற்றமாகக் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.