புதுவையில் 7 வாரியத் தலைவர்கள் நியமனம் நிறுத்தி வைப்பு : கிரண்பேடி உத்தரவு
புதுச்சேரியில் ஆளும் கூட்டணியை சேர்ந்தவர்களை வாரிய தலைவர்களாக நியமித்ததை நிறுத்தி வைத்து, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி MLA-க்களை பாப்ஸ்கோ, நகர அமைப்பு குழுமம் உள்ளிட்ட 7 வாரியங்களுக்கு தலைவர்களாக உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு தலைமை செயலாளராக இருந்த மனோஜ் பரிதா உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ள கிரண்பேடி, வாரிய தலைவர் நியமனத்திற்கு சட்டப்படி தன்னிடம் ஒப்புதல் பெறவில்லை என கூறியுள்ளார்.
ஏற்கனவே வாரிய தலைவர்களாக இருந்த 7 பேரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவர்களுக்கு மேலும் 2 ஆண்டு பதவி நீடிப்பு வழங்க முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பதவி நீட்டிப்பிற்கு அனுமதி கோரி துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு அரசு தரப்பில் கோப்புகள் அனுப்பப்பட்டன. ஆனால் இதற்கு கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் 7 MLA-க்களை வாரியத் தலைவர்களாக நியமித்து தலைமை செயலாளர் உத்தரவிட்டார். இதன் மூலம் காங்கிரஸ் அரசுக்கும், கிரண்பேடிக்கும் இடையிலான மோதல் சற்றும் வீரியம் குறையவில்லை என்பது உறுதியாகியுள்ளது.