வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி : வானிலை மையம் தகவல்
வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், முன்னதாக இலங்கை அருகே உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து, அரபிக்கடலுக்கு சென்று விட்டதாக குறிப்பிட்டார். தெற்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக குறிப்பிட்டார். அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
தென்தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையை பொறுத்த வரை இடைவெளி விட்டு சில முறை மிதமான மழை பெய்யும் என்றார். கடந்த 24 மணி நேரத்தில் தலைஞாயிறில் அதிகபட்சமாக 8 செ.மீ, திருப்பூண்டியில் 7, நீடாமங்கலம் மற்றும் கோத்தகிரியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக கூறினார். நாகை, பாபநாசம், குன்னூரில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.