Breaking News
முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐக்கு அதிரடி மாற்றம்

ராமஜெயம் கொலை  வழக்கில் 5 ஆண்டுக்கு பின்பும் சிபிசிஐடி விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், சிபிஐக்கு உடனடியாக மாற்றவும், 3 மாதத்திற்குள் விசாரணை முடித்து  அறிக்கை தாக்கல் செய்யவும் ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருச்சியை  சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். இவர்  29.3.2012ல் கொலை செய்யப்பட்டார். இவரது சடலம் மார்ச் 29ம் தேதி கல்லணை  செல்லும் சாலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில்  அவரது உடல் போர்வையால் சுற்றப்பட்டு, கம்பிகளால் கட்டி காட்டில்  வீசப்பட்டிருந்தது. இந்த கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. இதுகுறித்து தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிந்து  விசாரித்தனர்.

விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் வழக்கு சிபிசிஐடிக்கு  மாற்றப்பட்டது. அப்படி இருந்தும், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை விசாரணையில் எந்த  முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதுகுறித்து ராமஜெயத்தின் மனைவி லதா, 2014  டிசம்பரில் ஐகோர்ட் மதுரை கிளையில்  ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,  ‘‘என் கணவர் ராமஜெயம் கொலை வழக்கில், எந்த முன்னேற்றம் இல்லாததால்   சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இவர்களும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை.  எனவே, வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்,’’என கூறியிருந்தார்.
இந்த  மனு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடிக்கு கால அவகாசம்  அளிக்கப்பட்டது. இந்த மனு கடைசியாக கடந்த ஏப்ரல் 27ல், நீதிபதி  ஏ.எம்.பசீர்அகமது முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘சம்பவம்  நடந்து 5 ஆண்டுகளாகிறது.

இதுவரை தாக்கல் செய்யப்பட்ட 12 அறிக்கைகளும் ஒரே  மாதிரியாகவே உள்ளன. விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சிபிஐ  விசாரிப்பதுதானே சரியாக இருக்கும்,’’ என்றார். மனுதாரர் தரப்பு வக்கீல்,  ‘‘வியாபம் ஊழல் வழக்கு, ராஜிவ்காந்தி கொலை வழக்கு, டிஎஸ்பி விஷ்ணுபிரியா  வழக்கு போன்றவற்றில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசின் அதிகாரிகள்  ஒத்துழைப்பு தந்துள்ளனர். எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்,’’  என்றார். இதையடுத்து, மனு மீது தீர்ப்பளிப்பதாக கூறிய நீதிபதி, தேதி  குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஏ.எம்.பசீர்  அகமது முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல், ‘‘சிபிசிஐடி விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக  எங்களுக்கு மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும்,’’என்றார்.

‘‘இதுவரையில்  13 அறிக்கைகள் தாக்கல் செய்துள்ளீர்கள். ஆனால், விசாரணையில் எந்த  முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதுவரை குற்றவாளிகள் கைதாகவில்லை. கடைசியாக இரு  மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு  ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நவம்பர் மாதமாகிறது. என்ன நடவடிக்கை  எடுத்துள்ளீர்கள்? எந்த முன்னேற்றமும் இல்லையே?’’ என கூறிய நீதிபதி, அரசு  தரப்பு கோரிக்கையை நிராகரித்தார். பின்னர் நீதிபதி தனது தீர்ப்பில்,  ‘‘கொலையானவர் அரசியல் பிரமுகர். இந்த கொலை குறித்து அவரது குடும்பத்தினர்,  பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மர்மம் உள்ளதாக சந்தேகிக்கின்றனர்.  எனவே, மர்மத்தை போக்கிடும் வகையில் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது அவசியம்.  திருச்சி சிபிசிஐடி டிஎஸ்பியின் விசாரணையில் உள்ள இந்த வழக்கு, சிபிஐக்கு  மாற்றப்படுகிறது.

சென்னை சிபிஐ இணை இயக்குநர் உடனடியாக ஒரு விசாரணை  அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் விசாரணையை 3 மாதத்திற்குள் முடித்து  விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு மற்றும்  விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி போலீசார் உடனடியாக  சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்,’’ என உத்தரவிட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.