Breaking News
மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் கமல்ஹாசன் சந்திப்பு
நடிகர் கமல்ஹாசன் ஊழலுக்கு எதிராகவும், விவசாயிகள், மீனவர்கள் பிரச்சினைகளிலும் தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார். அவர் ‘டுவிட்டர்’ அரசியல் செய்வதாக ஆளும் கட்சியினர் விமர்சித்ததை தொடர்ந்து நேரடியாக களத்தில் குதித்தார். கொசஸ்தலை ஆற்றில் அனல் மின்நிலைய சாம்பல் கழிவு கொட்டப்படுவதை ஆய்வு செய்தார்.
பிறந்த நாள் விழாவை ரத்துசெய்து ஏழைகளுக்கு மருத்துவ முகாம் நடத்தினார். ரசிகர்களையும் சந்தித்து ஆலோசனைகள் வழங்கினார். இன்னொருபுறம் பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார்.
மம்தாவுடன் சந்திப்பு
கேரளா சென்று முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசினார். இதனால் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் சேரப்போவதாக கூறப்பட்டது. இதனை கமல்ஹாசன் மறுத்தார். பின்னர் ஊழலுக்கு எதிராக கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்த டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலையும் தனது வீட்டில் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கொல்கத்தா புறப்பட்டு சென்றார். அங்கு மேற்குவங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.
திரைப்பட விழா
மம்தா பானர்ஜி தேசிய அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். அவரை கமல்ஹாசன் சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தனிக்கட்சி தொடங்குவது சம்பந்தமாகவும், எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்தும் மம்தாவுடன் அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் கொல்கத்தாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். முன்னதாக கொல்கத்தா விமான நிலையம் வந்து இறங்கிய அவர் நிருபர்களிடம் கூறும்போது, “கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்து இருக்கிறேன். மேற்குவங்க திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றை விரும்பி பார்ப்பேன். மம்தா பானர்ஜியையும் பிடிக்கும். அவரை சந்திப்பதில் அரசியல் உள்நோக்கம் இல்லை” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.