Breaking News
வடகொரியாவுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும் பிராந்திய நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு
கொரிய தீபகற்ப பகுதியில் தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்கி வரும் வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகளின் ஆதரவை பெறும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஆசிய நாடுகளுக்கு 12 நாள் சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொண்டு உள்ளார்.
இந்த பயண திட்டத்தின் கீழ் தென்கொரியா, சீனா போன்ற நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட டிரம்ப் வியட்நாம் சென்றார். அங்குள்ள கடற்கரை நகரான தனாங்கில் நேற்று நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக்கான மன்றத்தில் அவர் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், ஒரு சர்வாதிகாரியின் வன்முறை ஆக்கிரமிப்பு மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தலின் திரிக்கப்பட்ட கற்பனையில் இந்த பிராந்தியமும், இங்குள்ள அழகான மக்களின் எதிர்காலமும் பிணைக்கைதியாக சிக்கிவிடக்கூடாது. பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை நோக்கி வடகொரியா மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் மிகப்பெரிய அபாயமாக எடுத்துக்கொண்டு அந்த நாட்டுக்கு எதிராக இந்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்’ என்றார்.
நியாயமான பரஸ்பர வர்த்தகத்தை கொண்டிருப்பதால் ஆசிய பசிபிக் பொருளாதார மன்றத்துடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட அமெரிக்கா தயாராகி விட்டதாக கூறிய டிரம்ப், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் எந்த நாட்டுடனும் பரஸ்பர மரியாதை மற்றும் பயன்கள் அடிப்படையில் வர்த்தகத்துக்கு தயார் என்றும் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, ‘பிற நாடுகள் அல்லது பிற மனிதர்களுடன் அமெரிக்கா எப்போது வர்த்தக உறவில் ஈடுபடுகிறதோ, அது முதல் எங்கள் கூட்டாளிகள் விதிமுறைகளை உண்மையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்ப்போம். நீண்டகால வர்த்தக முறைகேடுகளை அமெரிக்கா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது’ என்று தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.