Breaking News
ஜிம்பாப்வேயில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர்: சுஷ்மா சுவராஜ் தகவல்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஜிம்பாப்வே. ஏழை நாடான அங்கு 1980–ம் ஆண்டுமுதல் 1987–ம் ஆண்டு வரை பிரதமராகவும், 1987 முதல் 2017 வரை அதிபராகவும் இருந்து ஆட்சி நடத்தி வந்தவர் ராபர்ட் முகாபே (வயது 93).அங்கு அடுத்த அதிபர் ஆவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தவர் துணை அதிபர் எமர்சன் மனன்காக்வா. ஆனால் தனது மனைவி கிரேஸ் முகாபேவுக்கு (52) அதிகார போட்டியாக அமைந்து விடுவார் என்று கருதி, மனன்காக்வாவை அதிபர் ராபர்ட் முகாபே கடந்த வாரம் திடீரென பதவியில் இருந்து நீக்கி விட்டார். இதையடுத்து அடுத்த அதிபர் போட்டியில் ராபர்ட் முகாபேயின் மனைவி கிரேஸ் முகாபே (52) முன்னணிக்கு வந்தார்.
ஆனால் எமர்சன் மனன்காக்வா–கிரேஸ் முகாபே இருவருக்குள்ளும் சண்டை மூண்டது. இதன் காரணமாக அவர்களின் ஜானு பி.எப் கட்சியில் பிளவு உண்டானது. எமர்சன் மனன்காக்வாவுக்கு ஆதரவு அளிக்காதவர்களுக்கு அவரது கூட்டாளிகள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், ராணுவ புரட்சிக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கடந்த மாதம் கிரேஸ் முகாபே கூறி இருந்தார்.
இந்த நிலையில், அதிபரின் கட்சியில் இருப்பவர்கள் களை எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் வகையில் ராணுவம் தலையிட தயாராக உள்ளது என நேற்று முன்தினம் ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவென்கா கூறினார். ஆனால் அவர் மீது ஜானு பி.எப் கட்சி, தேசத்துரோக குற்றம் சாட்டியது.அதைத் தொடர்ந்து நேற்று அதிரடியாக ஜிம்பாப்வே அரசின் தொலைக்காட்சி நிலையத்தை (இசட்.பி.சி.) ராணுவ வீரர்கள் கைப்பற்றினர். இந்த தொலைக்காட்சி, அதிபரின் பிரசார பீரங்கியாக செயல்பட்டு வந்தது. அதன் ஊழியர்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டனர். சிலர் தாக்குதலுக்கும் ஆளாகினர்.
தொடர்ந்து  அரசு நிர்வாகத்தை ராணுவம் தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. எனினும், இது ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல எனவும், அதிபர் ராபர்ட்
முகாபே-க்கு நெருக்கமான குற்றவாளிகளை,  குறிவைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் விளக்கமளித்துள்ளர். ஜிம்பாப்வேயில் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவுவதால் அங்கு வாழும் வெளிநாட்டு மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் குறித்து கவலைப்படத் தேவையில்லை; அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். என்று அமைச்சர் சுஷ்மா
சுவராஜ் தெரிவித்துள்ளார்.  இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளதாவது:-ஜிம்பாப்வேயில் உள்ள இந்தியத் தூதரிடம் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தேன். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், கவலைப்படத் தேவையில்லை எனவும் இந்தியத் தூதர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்று அந்தப் பதிவில் சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.