Breaking News
சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு ஜெயில் உறுதி சிறையில் அடைக்க ஐகோர்ட்டு உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, அவரது உறவினர் களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு ஜெயிலில் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.

இதேபோல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகளும், அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் சகோதரியுமான ஸ்ரீதளாதேவிக்கும், அவரது கணவர் பாஸ்கரனுக்கும் கீழ் கோர்ட்டு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உறுதி செய்தது.

இந்த நிலையில், போலி ஆவணங்கள் மூலம் சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், அக்காள் மகன் வி.என்.பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை, ஐகோர்ட்டு நேற்று உறுதி செய்தது.

அந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-
இங்கிலாந்து நாட்டில் 1994-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘லெக்ஸஸ்’ சொகுசு காரை, அதே ஆண்டு சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் இந்தியாவுக்கு இறக்குமதி செய்தார். அப்போது வரி ஏய்ப்பு செய்வதற்காக, அந்த கார் 1993-ம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிக்கப்பட்டது என்றும், பயன்படுத்தப்பட்டு 2-வது நபருக்கு விற்பனை செய்யப்பட்ட அந்த காரை பழைய கார் என்றும் கூறி லண்டனில் இருந்து இறக்குமதி செய்து இருக்கிறார்.

இதற்காக போலி ஆவணங் களை தயாரித்து உள்ளனர். இதன்மூலம் அரசுக்கு ரூ.1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 412 இழப்பு ஏற்பட்டது.
இந்த மோசடியை கண்டு பிடித்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில், சி.பி.ஐ. போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்தார்கள்.

இந்த வழக்கில் எம்.நடராஜன், வி.என்.பாஸ்கரன், லண்டனில் இருந்து காரை அனுப்பிய தொழில் அதிபர் டாக்டர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ் பாலகிருஷ்ணன், சென்னை அபிராம புரம் இந்தியன் வங்கி கிளை மேலாளர் சுஜரிதா சுந்தரராஜன், உதவி மேலாளர் பவானி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில், பவானி ‘அப்ரூவராக’ மாறி விட்டார்.
டாக்டர் பாலகிருஷ்ணனை அதிகாரிகள் கைது செய்யவில்லை. அவரை தலைமறைவான குற்றவாளியாக அறிவித்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகளை தனி வழக்காக பிரித்தனர்.

எம்.நடராஜன் உள்ளிட்ட மற்ற 4 பேர் மீதான வழக்கை, ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விசாரித்தது. பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் 26-ந் தேதி தனிக்கோர்ட்டு வழங்கியது.

தனிக்கோர்ட்டு தனது தீர்ப்பில் கூறி இருந்ததாவது:-
வெளிநாட்டில் இருந்து போலி மற்றும் மோசடி ஆவணங்கள் மூலம் சொகுசு காரை இறக்குமதி செய்துள்ள குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.நடராஜன், வி.என். பாஸ்கரன், யோகேஷ் பால கிருஷ்ணன், சுஜரிதா சுந்தர ராஜன் ஆகியோர் மீதான கூட்டு சதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், வரி ஏய்ப்பு, ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன.

எனவே, இந்த 4 பேருக்கும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 2 ஆண்டுகள் வீதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை அவர்கள் ஏககாலத்தில் (2 ஆண்டுகள்) அனுபவிக்க வேண்டும். எம்.நடராஜன், வி.என்.பாஸ்கரன், சுஜரிதா சுந்தரராஜன் ஆகியோருக்கு தலா ரூ.20 ஆயிரமும், யோகேஷ் பாலகிருஷ்ணனுக்கு ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து எம்.நடராஜன் உள்ளிட்ட 4 பேரும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அவர்களுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

நீதிபதி ஜெயச்சந்திரன் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
இந்த வழக்கு மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சேகரித்த ஆவணங் கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது என்று மனுதாரர்கள் 4 பேரும் கூறுவதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் போலி ஆவணங் கள் மூலம் அரசை மோசடி செய்துள்ளனர் என்பதற்கு உறுதியான ஆதாரங்களும், ஆவணங்களும் உள்ளன.

வங்கி அதிகாரி சுஜரிதா சுந்தரராஜன் கொடுத்த தவறான சான்றிதழ் அடிப்படையில், 3 ஆயிரம் சி.சி. எந்திர திறன் கொண்ட ‘லெக்ஸஸ்’ காரை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து உள்ளனர். இவ்வளவு அதிக திறன் கொண்ட காரை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி இல்லை. 1,600 சி.சி.-க்கும் அதிகமான திறன் கொண்ட கார்களை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதற்கு சில விதிமுறைகள் உள்ளன.

அதன்படி, அதிக திறன் கொண்ட காரை இறக்குமதி செய்பவர்கள், இந்தியாவில் நிரந்தரமாக தங்கப்போகும் வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியராகவோ அல்லது இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவராகவோ இருக்கவேண்டும். அதுபோல, வெளிநாட்டில் 2 ஆண்டுகள் தங்கி இருந்து அங்கு, அந்த காரை ஓராண்டு பயன்படுத்திவிட்டு, அதன்பின்னர் இந்தியாவுக்கு கொண்டுவருபவராக இருக்கவேண்டும். இதுபோன்ற நபர்கள் தான் அதிக திறன் கொண்ட சொகுசு காரை இறக்குமதி செய்ய முடியும்.

இந்த வழக்கை பொறுத்தவரை, 1994-ம் ஆண்டு அக்டோபர் 13-ந் தேதி இந்த சொகுசு கார் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த காரை இறக்குமதி செய்வதற்காக, 1993-ம் ஆண்டே தயாரிக்கப்பட்ட கார் என்று போலி ஆவணங்களை தயாரித்து, 1994-ம் ஆண்டில் இறக்குமதி செய்து உள்ளனர். இந்த காருக்கான ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தலைமறைவு குற்றவாளியான பாலகிருஷ்ணனின் பெயரில் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

இதேபோல், வங்கி கணக்கு வைத்திருப்பவர் பெயரோ, அவரது வங்கி கணக்கு எண்ணையோ குறிப்பிடாமல் பண பரிவர்த்தனை நடந்து உள்ளது. இதற்கான சான்றிதழை வங்கி அதிகாரி சுஜரிதா சுந்தர ராஜன் வழங்கி இருக்கிறார். வங்கி அதிகாரி கொடுத்த தவறான இந்த ஆவணங்கள் குறித்து கீழ் கோர்ட்டு சரிவர விசாரிக்கவில்லை.

இந்த வழக்கில், சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பார்க்கும்போது, குற்றச்சாட்டுக்கு ஆளான இவர்கள் சுங்கத்துறை சட்டத்தை அப்பட்டமாக மீறி இருப்பது தெளிவாக தெரிகிறது.
இந்த காருக்கான சுங்க வரி தொகை வெளிநாட்டு பணமாக வழங்காமல், இந்திய பணமாக எம்.நடராஜன் வங்கி கணக்கில் இருந்து வழங்கப்பட்டு உள்ளது. இந்த பண பரிவர்த்தனையும், இந்த வங்கி கணக்கையும் வி.என். பாஸ்கரன் கையாண்டு உள்ளார்.

அதேபோல, வாகன பதிவுச்சான்று உள்ளிட்ட போலி ஆவணங்களை, பாலகிருஷ்ணன் பெயரில் யோகேஷ் பாலகிருஷ்ணன் தயாரித்து இருக்கிறார். இந்த கூட்டு சதிக்கு வங்கி அதிகாரியும் உடந்தையாக இருந்து உள்ளார்.

மேலும், இந்த கார் இறக்குமதி மோசடியில் மூத்த சுங்கத்துறை அதிகாரிக்கும் தொடர்பு உள்ளது. ஆனால், அந்த அதிகாரியை குற்றவாளியாக சேர்க்க சி.பி.ஐ. போலீசாருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. அதனால், அவர் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை.

கீழ் நிலை அதிகாரியான அவரை காப்பாற்றுவதற்காக, வழக்கில் அவரை குற்றவாளியாக சேர்ப்பதற்கு ஒப்புதல் அளிக்காமல் உயர் அதிகாரிகள் இருந்து உள்ளனர். இதை கவனத்தில் கொள்ள வேண்டியது உள்ளது.
இருந்தாலும், இந்த காரணத்துக்காக எம்.நடராஜன் உள்ளிட்டோரை தண்டனையில் இருந்து விடுவிக்க முடியாது. குற்றவாளிகள் 4 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனையை உறுதி செய்கிறேன்.

எனவே இந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. குற்றவாளிகளை பிடித்து சிறையில் அடைத்து, அவர்கள் தண்டனை காலத்தை அனுபவிக்க விசாரணை நீதிமன்றமான சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

இந்த தீர்ப்பு கூறப்பட்டதும், எம்.நடராஜன் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ‘தண்டனை பெற்ற 4 பேரும் கீழ் கோர்ட்டில் சரணடைய கால அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்த கோரிக்கையை நீதிபதி ஏற்கவில்லை. இந்த கோரிக்கையை கீழ் கோர்ட்டில் தெரிவித்து முறையிடும்படி உத்தரவிட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.