Breaking News
நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நாளை பகல் 2 மணிக்கு நடைபெறும் என்று அறிவித்து உள்ளனர். இதில் கலந்துகொள்ளும்படி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகர்–நடிகைகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

நடிகர் சங்கத்தில் 3 ஆயிரம் பேர் உறுப்பினராக உள்ளனர். அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று அழைக்கப்பட்டு இருக்கின்றனர். நடிகர் சங்கத்துக்கு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் சங்க கட்டிட வேலையை முடித்துவிட்டு தேர்தல் நடத்தலாம் என்று உறுப்பினர்கள் பலர் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தேர்தல் அடுத்த வருடத்துக்கு தள்ளிப்போகலாம் என்ற பேச்சு நிலவுகிறது. ஆனால் அதிருப்தியாளர்கள் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்த வேண்டும் என்று உறுதியாக உள்ளனர். தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக விஷால் அறிவித்து உள்ளார். அவர் தலைமையில் செயல்படும் தற்போதையை நிர்வாகிகள் அனைவரும் மீண்டும் தேர்தலில் நிற்பார்கள் என்று தெரிகிறது.

விஷாலுக்கு எதிராக ராதாரவி ஆதரவாளர்கள் களத்தில் இறங்குகிறார்கள். டி.ராஜேந்தரை தலைவர் பதவிக்கு நிறுத்த அவர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பொதுக்குழு கூடுவதால் கூட்டத்தில் மோதல் ஏற்படலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது. கடந்த பொதுக்குழுவில் விஷாலுக்கு டி.ராஜேந்தர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது மோதல் ஏற்பட்டு கூட்டத்தை பாதியிலேயே நிறுத்தினார்கள்.

எனவே நாளை நடைபெறும் பொதுக்குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி நடிகர் சங்கம் சார்பில் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுக்குழுவுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.