Breaking News
கேரள மக்களுக்கு தி.மு.க.வினர் உணவுபொருட்கள், துணிகளை சேகரித்து அனுப்ப மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடரில் 324 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற துயரச்செய்தி இதயத்தை நிலைகுலைய வைக்கிறது. பேரழிவில் ஏற்பட்டுள்ள சேதங்களின் பட்டியல் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. பேய் மழையின் தாக்கத்திலிருந்து மக்களை காப்பாற்ற கேரள அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவிகள் இன்னும் கேரள மாநிலம் சென்றடையவில்லை என்று வரும் செய்திகள் வேதனையளிப்பதாக உள்ளன.

இந்நிலையில் அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி வைத்துவிட்டு, பெருந்துயரத்தில் சிக்கித்தவிக்கும் கேரள மக்களுக்கு நேசக்கரம் நீட்டி அவர்களை இந்த பேராபத்திலிருந்து உடனடியாக மீட்பதற்கும், வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் மத்திய அரசு உடனடியாக உதவிகளை செய்ய வேண்டும்.

தி.மு.க. பங்கேற்க வேண்டும்

கேரள அரசுக்கு தேவையான நிர்வாகரீதியான ஒத்துழைப்பையும், நிவாரண மற்றும் நிதியுதவிகளையும் தாராளமாக வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும். உடையின்றி, உணவின்றி தங்களின் வீடுகளையும் இழந்த மக்களை கேரள மாநில அரசு முகாம்களில் தங்கவைத்து தேவையான உதவிகளை செய்துவருகிறது. மனிதநேயமிக்க இந்தப் பணியில் தி.மு.க.வும் பங்கேற்க வேண்டும்.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தி.மு.க. தொண்டர்களிடமும், தாமாக மனமுவந்து உதவிசெய்ய முன்வரும் பொதுமக்களிடமும் போதிய உணவுப்பொருட்கள், துணிகள், போர்வைகள், நேப்கின்கள் உள்ளிட்ட அன்றாட தேவைக்கு பயன்படும் பொருட்களை சேகரித்து கேரள மாநிலத்தில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் மூலம் அம்மாநில மக்களுக்கு அளித்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு வழங்கப்படும் பொருட்களின் விவரங்களை தலைமை கழகத்திற்கு அனுப்பிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.