வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிரந்தர அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தரப்படும்; முதல் அமைச்சர் பழனிசாமி
ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வெள்ள நீர் பவானி பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.
இதனால் வீடுகள் பல வெள்ளநீரில் மூழ்கின. வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சாலை முழுவதும் வெள்ளம் வழிந்தோடியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
இந்த நிலையில், வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி இன்று அமைச்சர்களுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் சென்றனர்.
அதன் பின்னர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வேட்டி, சேலை, உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை முதல் அமைச்சர் வழங்கினார்.
இதனை தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அவர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். வெள்ள நீரில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து கொண்டார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி கூறினார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, தென்மேற்கு பருவமழையால் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தினால் 263 வீடுகள் முழுவதும் சேதமடைந்து உள்ளன.
ஈரோட்டில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு 67 நிவாரண முகாம்களில் 2,335க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்து தரப்பட்டு உள்ளன.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள குழந்தைகளுக்கு பால், ரொட்டி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும், பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகின்றன.
அவர்களுக்கு காவல் துறையால் போதிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஜெனரேட்டர் உதவியுடன் மின் வசதி செய்து தரப்பட்டு உள்ளது. கழிப்பிட வசதி, மருத்துவ வசதி ஆகியவையும் செய்யப்பட்டு உள்ளன.
ஆற்றில் ஆகாய தாமரை தேங்கி உள்ளதனால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது என கூறுவது ஏற்க முடியாதது. பருவமழை நீரை சேமிக்க தடுப்பணைகள் கட்டப்படும்.
காவிரி, பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 50 கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளத்தினால் 800க்கும் கூடுதலான விவசாயிகள் பாதிப்படைந்து உள்ளனர். வெள்ளம் சூழ்ந்து 1,976 வீடுகள் பாதிப்பு அடைந்துள்ளன என கூறியுள்ளார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தரப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.