Breaking News
ஆசிய விளையாட்டு: கபடி, ஆக்கியில் இந்தியா அசத்தல் வெற்றி நீச்சலில் ஏமாற்றம்

ஆசிய விளையாட்டு போட்டியில் கபடியில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் அட்டகாசமான வெற்றிகளை குவித்தன. பெண்கள் ஆக்கியில் இந்தியா முதல் ஆட்டத்தில் மெகா வெற்றியை ருசித்தது.

கபடி போட்டி
கபடி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி எதிர்பார்த்தது போலவே வெகுவாக ஆதிக்கம் செலுத்தியது. இதன் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 11 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி ஒரே நாளில் 2 ஆட்டங்களில் மோதியது. காலையில் வங்காளதேசத்தை 50–21 என்ற புள்ளி கணக்கில் பந்தாடிய இந்திய அணி மாலையில் இலங்கையை 44–28 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தது. ஆசிய விளையாட்டில் கபடி 1990–ம் ஆண்டு அறிமுகம் ஆனதில் இருந்து இந்திய அணி தொடர்ச்சியாக 7 தங்கப்பதக்கத்தை அறுவடை செய்து மகத்தான சாதனை படைத்திருப்பது நினைவு கூரத்தக்கது.

கபடியில் பெண்கள் பிரிவில் 9 அணிகள் மல்லுகட்டுகின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் வகிக்கும் நடப்பு சாம்பியனான இந்தியா 43–12 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானை துவம்சம் செய்தது.

பேட்மிண்டன், டென்னிஸ், ஆக்கி
அணிகளுக்கான பேட்மிண்டனில் ஆண்கள் பிரிவில் இந்தியா 3–0 என்ற கணக்கில் மாலத்தீவை வெளியேற்றி கால்இறுதிக்கு முன்னேறியது.

டென்னிசில் கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திவிஜ் சரண்–கர்மான் கவுர் தான்டி ஜோடி 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் கபடோசியா– ஆல்பர்ட்டோ ஜூனியர் லிம் (பிலிப்பைன்ஸ்) இணையை வென்றது.

பெண்களுக்கான ஆக்கியில் 10 அணிகள் களம் இறங்கியுள்ளன. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 8–0 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவை நொறுக்கியது. இந்திய அணியில் குர்ஜித் கவுர் (3 கோல்), வந்தனா (2), நவ்னீத் கவுர்(2), உதிதா (1) ஆகியோர் கோல் போட்டனர்.

நீச்சல், ஹேண்ட்பாலில் ஏமாற்றம்
ஹேண்ட்பால் போட்டியில் பெண்கள் பிரிவின் லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா 21–36 என்ற புள்ளி கணக்கில் சீனாவிடம் தோற்றது. இந்தியா தொடர்ச்சியாக சந்தித்த 3–வது தோல்வியாகும்.

நீச்சலில் ஆண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் 7–வது இடத்துக்கு (56.19 வினாடி) தள்ளப்பட்டார். 52.34 வினாடிகளில் இலக்கை கடந்த சீனாவின் சூ ஜியாயு தங்கப்பதக்கத்திற்கு முத்தமிட்டார். இதே போல் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்திய வீரர் சஜன் பிரகாஷ் 1 நிமிடம் 57.75 வினாடிகளில் இலக்கை எட்டி 5–வது இடத்தை பெற்று ஏமாற்றம் அளித்தார்.

கூடைப்பந்து போட்டியில் (5 பேர்) இந்திய பெண்கள் அணி 61–84 என்ற புள்ளி கணக்கில் சீனத் தைபேயிடம் பணிந்தது.

கைப்பந்து போட்டியில் பெண்களில் (பி பிரிவு) இந்தியா 17–25, 11–25, 13–25 என்ற செட் கணக்கில் தென்கொரியாவிடம் தோல்வியை தழுவியது.

துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, மானுபாகெர் ஜோடி 759 புள்ளிகளுடன் பின்தங்கி இறுதி சுற்றை அடைய தவறியது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.